மக்கள் செயல் கட்சி மாநாட்டில் கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமருமான திரு லாரன்ஸ் வோங் ஆற்றிய கொள்கை விளக்க உரை, உலகளாவிய சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் சிங்கப்பூரின் எதிர்காலப் பயணத்திற்கான மிகத் தெளிவான, தொலைநோக்குப் பாதையை வகுத்தளித்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்ரம் நாயரும் டாக்டர் ஹமீது ரசாக்கும் ஒருமனதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை நடைபெற்றது.
அதில் பிரதமர் ஆற்றிய உரையை முழுமையாக ஆதரித்துப் பேசிய செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், சிங்கப்பூரர்களின் ஒற்றுமை, அனைத்துலக உறவுகள், மக்களுக்கான சமூக ஆதரவு ஆகிய மூன்று முக்கியத் தூண்களை பிரதமர் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளார் என்றார்.
“சவால்கள் நிறைந்த உலகச் சூழலில் தனிநாடாக நின்று நாம் தனித்து வெற்றிபெற முடியாது. இதனால்தான் சிங்கப்பூரர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நமது மக்களுக்கு, குறிப்பாக, மூத்த ஊழியர்களுக்கு அரசு எப்போதும் உடனடி ஆதரவுக் கவசமாகத் துணைநிற்கும்.
“எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு சில நேரங்களில் கடினமான முடிவுகளை அரசு எடுக்க நேரிட்டாலும், அவை அனைத்தும் நாட்டு மக்களின் நீண்டகால நலனுக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மக்கள் புரிந்துகொண்டு துணைநிற்பது மிக அவசியம்,” என்று திரு விக்ரம் விளக்கினார்.
இதற்கிடையே, மசெக மாநாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்ட கட்சியின் மத்திய செயற்குழு வாக்களிப்பு முடிவுகள் குறித்து எழுந்த விவாதங்களுக்கும் திரு விக்ரம் விளக்கமளித்தார்.
செயற்குழுவில் இடங்கள் குறைவாக உள்ள காரணத்தினால், அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் அதிக வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இயல்பானதே என்றும் இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தகுதியும் திறமையும் கொண்ட இளைய அமைச்சர்கள் எதிர்காலத்தில் உரிய வாய்ப்புகளைப் பெறுவர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே, கட்சியின் களநிலவரம் குறித்து கருத்துரைத்த வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹமீது ரசாக் இளையத் தலைமுறையினருடன் கட்சி ஏற்படுத்த வேண்டிய உணர்வுபூர்வமான பிணைப்பை பிரதமர் சுட்டிக்காட்டியிருப்பதை ஆமோதித்தார்.
மசெக கடந்த காலங்களில் படைத்த மாபெரும் சாதனைகளையும் வரலாற்றையும் பார்த்து மட்டுமே இன்றைய இளம் தலைமுறையினர் கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எண்ணிவிடக் கூடாது என்ற பிரதமரின் கருத்தை அவர் ஆழமாக வழிமொழிந்தார்.
“இன்றைய இளம் சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளையும், அவர்களின் ஆழ்ந்த மன உணர்வுகளையும் கட்சித் தொண்டர்கள் அணுக்கமாகக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.
“அவர்களுடன் ஆக்கபூர்வமான நல்லுறவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களின் சிந்தனைகளையும் நம்பிக்கையையும் நாங்கள் வெல்ல முடியும். இதுவே மசெக தலைவர்களின் தலையாயக் கடமையாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழுவினர் மக்கள் செயல் கட்சியை வலிமையோடு முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுதிமிக்க, அனுபவம் வாய்ந்த குழுவாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
