சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்து வந்தாலும், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை, நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் மணிநேர பிஎம்2.5 அளவு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி, பிஎம்2.5 அளவீடு 31 முதல் 48 வரை பதிவாகி, இயல்பு வரம்புக்குள் வந்துள்ளது. தற்போதைய காற்றின் தரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அளவீடுகள் மணிநேர அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.
பூஜ்ஜியத்திலிருந்து 55 வரையிலான குறியீட்டு எண்கள் இயல்பான நிலையையும் 56 முதல் 150 வரையிலான அளவீடுகள் காற்றில் நுண்துகள்களின் செறிவு அதிகரித்திருப்பதையும் குறிக்கின்றன.
தீவு முழுவதும் மணிநேர பிஎம்2.5 அளவீடு சனிக்கிழமை (அக்டோபர் 24) மாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே காணப்பட்டது.
அதேவேளையில், தெற்குப் பகுதியைத் தவிர்த்து சிங்கப்பூரின் ஏனைய அனைத்து வட்டாரங்களிலும் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 107 முதல் 132 வரை பதிவாகி, தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
தெற்குப் பகுதியில் மட்டும் காற்றின் தரம் காலை 10 மணிக்கு 100 என்ற அளவில் பதிவாகி, நன்று முதல் மிதமானது என்ற வரம்பில் நீடித்தது. ஆறு முதன்மை காற்று மாசுபடுத்திகளை 24 மணி நேரச் சுழற்சி சராசரியாகக் கொண்டு கணக்கிடப்படும் இக்குறியீடு, பூஜ்ஜியத்திலிருந்து 100 வரை பதிவானால் காற்றின் தரம் நன்று முதல் மிதமானது என்றும், 101 முதல் 200 வரை இருந்தால் ஆரோக்கியமற்றது என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டும்போது, குறிப்பாக, மூத்தோர், சிறுவர்கள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் திறந்தவெளி நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
