ஈசூனில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தை (பிஎம்டி) ஓட்டி சென்ற 50 வயது மாது ஒருவர் விபத்தில் சிக்கினார். அவர் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து சனிக்கிழமை (ஜூலை 7) காலை 11.35 மணிவாக்கில் ஈசூன் அவென்யூ 4, ஈசூன் ஸ்திரீட் 51 சாலை சந்திப்பில் நடந்தது. அதைத் தொடர்ந்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டி வந்த பெண் சாலை சந்திப்பைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை ஒரு கார் மோதியது.
காருடன் மோதியதால் அப்பெண் சாலையில் விழுந்தார். அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
46 வயது கார் ஓட்டுநர் விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் விபத்தில் காயமடைவர்கள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டைவிட 2023ஆம் ஆண்டில் சற்று கூடியுள்ளது.
2022ஆம் ஆண்டு 8,441 பேர் விபத்தில் காயமடைந்தனர். 2023ஆம் ஆண்டில் 8,931 பேர் காயமடைந்தனர்.

