பிஎம்இடி பிரிவினருக்கான தேவை ஆட்குறைப்பைவிட அதிகம்

பிஎம்இடி பிரிவினருக்கான தேவை ஆட்குறைப்பைவிட அதிகம்

1 mins read
b30ce577-150e-467e-93ec-a53b215dc88b
2025 டிசம்பர் நிலவரப்படி, நிதித்துறையில் 4,100 பிஎம்இடி காலிப் பணியிடங்களும் தகவல் தொடர்புத் துறையில் 5,300 இடங்களும் இருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான (பிஎம்இடி) தேவை, ஆட்குறைப்பு எண்ணிக்கையைவிட அதிகமாகவே உள்ளது என்று மனிதவள, நிதி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 8) பேசிய அவர், இதில் பெரும்பாலான பிஎம்இடி வேலைகள் நிதி, தகவல் தொடர்புத் துறைகளில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

2025 டிசம்பர் நிலவரப்படி, நிதித்துறையில் 4,100 பிஎம்இடி காலிப் பணியிடங்களும் தகவல் தொடர்புத் துறையில் 5,300 இடங்களும் இருந்தன.

ஒப்புநோக்க, 2025 கடைசி காலாண்டில் இவ்விரு துறைகளையும் சேர்த்து மொத்தம் 960 பிஎம்இடி ஊழியர்கள் மட்டுமே ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

ராடின் மாஸ் தனித்தொகுதி உறுப்பினர் மெல்வின் யோங்கின் கேள்விக்குப் பதிலளித்தபோது திரு ஹுவாங் இந்த விவரங்களை வெளியிட்டார்.

வேலை தேடுவோர்க்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான பொருத்தத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆட்குறைப்பு செய்யப்பட்ட பிஎம்இடிகளின் விவரங்கள், சந்தையில் உள்ள வேலைகள் குறித்து ஆய்வுசெய்ய மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளதா என்பதே திரு யோங் முன்வைத்த கேள்வி.

ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் நிதி, தகவல் தொடர்புத் துறைகளில் பிஎம்இடிகளின் ஆட்குறைப்பு குறைவாகவே இருப்பதாக திரு ஹுவாங் தெரிவித்தார்.

ஊழியர்கள் இத்தகைய புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் திரு ஹுவாங் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்