அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி நியமனம் தொடர்பாகத் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக, ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ ஊடகத்தின் தலைமை ஆசிரியருக்கும் அதன் வெளியீட்டாளருக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் திருத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்தத் தவறான தகவல்கள் அந்த ஊடகத்தின் இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்கள், ‘ஹெய்டோ’ என்ற செயற்கை நுண்ணறிவுத் தளம் ஆகியவற்றில் மார்ச் 9ஆம் தேதி வெளியானது.
சிங்கப்பூரின் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ தலைமை ஆசிரியர் டெர்ரி சூ யுவான் சென்னுக்கும் அதை வெளியிடும் தைவானைச் சேர்ந்த மியாவோ யி இன்ஃபோடெக் நிறுவனத்திற்கும் அந்தத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்கின் அறிவுறுத்தலின்படி பொஃப்மா அலுவலகம் அதனைப் பிறப்பித்ததாகச் சட்ட அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்தத் திருத்த உத்தரவின்படி, திரு டெர்ரி சூவும் மியாவோ யி இன்ஃபோடெக் நிறுவனமும் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’, ‘ஹெய்டோ’ இணையத்தளங்கள், அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் திருத்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
மேலும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிலும் அந்த அறிவிப்புகளை அச்சிட வேண்டும்.
தாங்கள் வெளியிட்ட தகவல் தவறானது என்பதைக் குறிப்பிட்டு, அரசாங்கத்தின் அதிகாரபூர்வ விளக்கத்திற்கான இணையப் பக்கத்திற்கான இணைப்பையும் வழங்க வேண்டும்.

