வாழ்வில் நம்பிக்கையும் மனதில் உறுதியும் இருந்தால் முதுமையையும் அதனால் ஏற்படும் நலிவையும் இயல்பானதாக ஏற்று மகிழ்ச்சியாக வாழலாம் என்று வாழ்ந்து காட்டுகிறார்கள் 86 வயது கனகசிங்கம் குணரத்னமும் அவரது 76 வயது மனைவி லட்சுமி தம்பிமுத்துவும்.
மார்சிலிங் வட்டாரத்திலுள்ள ஈரறை அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் இத்தம்பதிக்கு நிதிப்பற்றாக்குறை இருந்தபோதும், இருவரிடமும் அன்பும் நம்பிக்கையும் நிறைந்திருக்கிறது.
புத்தாண்டு சிறப்பாக இருக்கும் என்று உற்சாகத்துடன் கூறினர் இந்த இணையர்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கிள்ளானில் 1938ல் பிறந்து, தோட்டத்தில் வளர்ந்து, சிங்கப்பூர் ஆகாயப் படை வீரராகப் பணிபுரிந்திருக்கும் திரு கனகசிங்கத்தின் வாழ்க்கை, அனுபவங்களும் சவால்களும் நிறைந்தது.
ஆகாயப் படை வீரர், அரசியல் தொண்டர், சமூகத் தொண்டூழியர் என்று பல அனுபவங்கள் இவருக்கு உண்டு.
எஸ்.ஆர்.நாதனைப் பார்த்து வளர்ந்தவர்
வீட்டில் ஐந்து பிள்ளைகள். 1940களில் தோட்ட மேற்பார்வையாளராக இருந்த அவருடைய தந்தையின் சம்பளம் கிட்டத்தட்ட 200 வெள்ளி. கிள்ளான் தோட்டத்தில் வளர்ந்த கனகசிங்கம் பத்தாம் வகுப்பு முடித்ததும் தோட்டத்தில் வேலை கிடைத்தது. கோலாலம்பூரைச் சேர்ந்த லட்சுமியை மணமுடித்த பின்னர்,1950களில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.
அப்போது இங்கிருந்த பிரிட்டிஷ் ஆகாயப் படையில் சேர்ந்தவர், பின்னர் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையில் இணைந்தார். ஓய்வு பெறும் வரையில் அங்கேயே பல ஆண்டுகள் பணியாற்றினார்.
சிறுவயதில் மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனைப் பார்த்து வளர்ந்தவரான திரு கனகசிங்கம் குளுவாங் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 1940களில் ஜப்பானியப் பல்மருத்துவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய திரு நாதன், அப்போது குளுவாங் மக்களால் மதிக்கப்பட்டவராக இருந்தார் என நினைவுகூர்ந்தார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஒருமுறை நிகழ்ச்சியொன்றில், திரு நாதனிடம் குளுவாங் காலம் பற்றிக் கூறியதை நினைவு வைத்திருந்த திரு நாதன், பல்லாண்டுகள் கழித்து அவரிடம் பிபிஎம் விருதைப் பெற்றபோது, ‘எப்படி இருக்கிறாய்’ எனக் கேட்டு நலம் விசாரித்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
சமூகத் தொண்டூழியம், அரசியல் தொண்டு
குடும்பம், வேலை என்பதுடன் இள வயதிலிருந்தே சமூகத் தொண்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
கால்வாய்களை அமைப்பது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகச் சீரமைப்புப் பணிகளை உள்ளடக்கிய அன்றைய ‘கோத்தோங் ரோயோங்’ (Gotong Royong) திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு கனகசிங்கம், “பாம்புக்கடி, உடும்புக்கடி போன்ற இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு அந்தப் பணிகளை மேற்கொண்டோம்,” என்றார்.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையிலிருந்து 1981ல் ஓய்வுபெற்ற பின்னர், அரசியலில் தொண்டூழியத்தைத் தொடர மக்கள் செயல் கட்சியில் (மசெக) சேர்ந்தார். ஆன்சன் தனித்தொகுதியில் அப்போது நடந்த இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்ட திரு கனகசிங்கம், ஈராண்டுகளில் கட்சியின் உள்வட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து 30 ஆண்டுகளாகக் கட்சியில் இருந்தபின் 2000ல் பிபிஎம், நீண்ட நாள் சேவை விருது உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்றார் திரு கனகசிங்கம்.
இனிமை சேர்க்கும் எண்ணங்கள்
பாதுகாவல் அதிகாரியாக வேலை செய்துவந்த திரு கனகசிங்கம், 2018ல் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டபின் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
சக்கரநாற்காலியில் நடமாடினாலும் மனைவிக்காக சந்தையிலிருந்து அன்றாடம் பொருள்வாங்கி வருகிறார் திரு கனகசிங்கம். கணவருக்காக அவர் விரும்பியதைச் சமைத்துத் தருகிறார் திருவாட்டி லட்சுமி.
ஒற்றைப் பெற்றோரான அவர்களது ஒரே மகள், தனது மகனைப் பராமரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதனால் தங்களை ஆதரிக்கும் நிலையில் தங்கள் மகள் இல்லை என்பதை இப்பெற்றோர் உணர்ந்துள்ளனர்.
“கால் வலிதான் வேதனை தருகிறது,” என்றவர் காலையில் ஏழு விதமான மருந்துகள், இரவில் எட்டு விதமான மருந்துகள் உட்கொள்கிறார். இருவருக்கும் மூப்பினால் ஏற்படும் நோவும் சோர்வும் இருந்த போதும் இருவரும் பல கதைகளைப் பேசியபடி, நிறைவோடு வாழ்கின்றனர்.
சிறிது சேமிப்பு உள்ளது. சிறிய உதவித்தொகையும் கிடைக்கிறது. சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதால் சிக்கலின்றி வாழ்கிறார்கள்.
“கடன் இல்லை. எனக்கும் என் மனைவிக்குமான இறுதிச் சடங்குகளுக்கும் சேமித்து வைத்திருக்கிறேன்,” என்று திரு கனகசிங்கம் சொன்னபோது, அவர் குரலில் நம்பிக்கையே மிகுந்திருந்தது.
“நடந்து முடிந்தவற்றை எண்ணி அதிகம் வருந்தாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்க்கையை எப்படி வாழ்கின்றோம் என்பதில்தான் எல்லாம் உள்ளது,” என்ற அவரிடம் நிதானமும் வாழ்க்கை குறித்த நன்றியுணர்வும் நிறைந்துள்ளன.

