பொக்கிமோன் வர்த்தக அட்டை இணைய மோசடியில் $51,000 இழப்பு

பொக்கிமோன் வர்த்தக அட்டை இணைய மோசடியில் $51,000 இழப்பு

2 mins read
a16e3fd6-d9ca-495f-9269-e03fc8c9b9e9
ஹார்பர்ஃபிரன்ட் எம்ஆர்டி நிலையத்தில் காணப்படும் அறிவிப்பு, இணையப் பாதுகாப்புப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றப் பொதுமக்களை ஊக்குவிக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இணையத்தில் மின்னிலக்கப் பொக்கிமோன் வர்த்தக அட்டைகளுடன் தொடர்புடைய வேலை மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சென்ற மாதம் (ஜனவரி) முதல் தேதியிலிருந்து அத்தகைய 7 மோசடிச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகக் காவல்துறை வியாழக்கிழமை (பிப்ரவரி 5) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அந்தச் சம்பவங்களில் குறைந்தது $51,600 இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சம்பந்தமில்லாதோரிடமிருந்து மலேசியத் தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புகள் வரும். இணையத்தில் செய்யக்கூடிய வேலை இருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் கூறுவர்.

மோசடி இணையத்தளத்தில் ஒரு கணக்கிற்குப் பதிவுசெய்து, அதில் மின்னிலக்க நாணயத்தைப் போடுமாறும் பாதிக்கப்பட்டோர் கேட்டுக்கொள்ளப்படுவர். போட்ட முன்பணத்தைக் கொண்டு இணையத்தில் மின்னிலக்கப் பொக்கிமோன் வர்த்தக அட்டைகளை அவர்கள் தெரிவுசெய்யலாம். அட்டையின் மதிப்பிற்கு ஏற்ப அவர்களுக்குத் தரகுத் தொகை கிடைக்கும்.

அந்தத் தொகை அவர்களின் கணக்கில் போடப்படும். கூடுதல் மதிப்புள்ள அட்டைக்கு அதிக முன்பணம் செலுத்தவேண்டும். பின்னர் அவர்கள் தரகுத் தொகையைப் பெறலாம்.

சில நேரங்களில், பாதிக்கப்பட்டோரின் கணக்கில் பணம் பூஜ்ஜியத்துக்குக் குறைவாக இருந்தால் மீண்டும் கூடுதல் முன்பணத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இணையத்திலிருந்து பணத்தை மீட்கமுடியாமல் போகும்போதுதான் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர்கள் உணர்வர்.

மோசடி அழைப்புகளிலிருந்தும் தகவல்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள ‘ஸ்கேம்‌ஷீல்ட்’ செயலியைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

மோசடி அழைப்புகளா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், ஸ்கேம்‌ஷீல்ட் உதவித்தொலைபேசி எண்ணான 1799ஐ அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்