உட்லண்ட்ஸ் மார்ட்டில் இருக்கும் கிண்டர்லேண்ட் பாலர் பள்ளியில் பிள்ளைகளைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின்பேரில் 33 வயது ஆசிரியரைக் காவல்துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் திங்கட்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் புகார் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.
கிண்டர்லேண்ட் பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய அந்த ஆசிரியை பிள்ளைகளைத் தண்ணீர் அருந்தும்படி வற்புறுத்துவதையும் அவர்களைப் புத்தகங்களைக் கொண்டு பிட்டத்தில் அடிப்பதையும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் காண முடிந்தது.
அந்த ஆசிரியரைப் பணிநீக்கம் செய்துவிட்டதாகப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது.
ஜூரோங் வட்டாரக் காவல் நிலைய அதிகாரிகள், புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அந்த ஆசிரியரை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்தனர்.
அவர்மீது பிள்ளைகளைத் துன்புறுத்தியதற்காக நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சுமத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் $8,000 அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அந்த ஆசிரியர் பிள்ளைகளைத் துன்புறுத்தும் காணொளிகளைப் பார்த்த பிறகு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த பாலர் பள்ளி செம்பவாங் குழுத் தொகுதியில் அமைந்துள்ளது.
அந்த தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் தனது ஃபேஸ்புக் பதிவில், “பிள்ளைகளுக்கு நடக்கும் இதுபோன்ற துன்புறுத்தல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது,” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் தற்போது தெரிவிக்க முடியாது எனவும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
பாலர் பள்ளி நிறுவனங்கள் தங்கள் மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் மையங்களுக்கு வரும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யப் பாலர் பள்ளி நிறுவனங்களுடன் இணைந்து அமைப்பு பணியாற்றும் எனவும் அவர் சொன்னார்.