மோசடி: $51.7 மில்லியன் இழப்பைத் தடுத்த காவல்துறை, வங்கிகள்

2 mins read
25a67348-fedc-4d15-ad96-efc22c357567
மோசடிகளால் பணத்தை இழக்கவிருந்த 3,500க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை குறுஞ்செய்தியைக் காவல்துறையும் வங்கிகளும் அனுப்பின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறையும் நான்கு வங்கிகளும் இணைந்து மோசடிகளில் $51.7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழக்கவிருந்த 3,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் காப்பாற்றியுள்ளன.

இரண்டு மாதம் நீடித்த முயற்சியால் அது சாத்தியமானது.

மோசடிக்குப் பலியாகக்கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்குக் காவல்துறையின் மோசடி ஒழிப்பு நிலையமும் டிபிஎஸ், ஓசிபிசி, ஸ்டான்டர்ட் சார்டட், யுஓபி ஆகிய வங்கிகளும் 5,600க்கும் அதிகமான எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பின.

மார்ச் 1ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30ஆம் தேதிவரை அந்தக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன.

“மோசடி முயற்சிகளை முறியடிக்கவும், மோசடிக்காரர்களுக்கு தங்கள் சேமிப்புகளை அனுப்புவதிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும் அந்தத் தலையீடு மிகவும் முக்கியம்,” என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) அறிக்கை வெளியிட்டது.

குறுஞ்செய்திகளை மீண்டும் அனுப்புவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்வோர், முதலீடு, போலியான நண்பர் அழைப்பு, மின்வர்த்தக மோசடி ஆகியவற்றை அடையாளம் காண்பதில் அந்தத் தொழில்நுட்பம் உதவியதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

1,100க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மின்சாதனங்களிலும் வங்கிச் செயலிகளிலும் இரண்டு முறை சரிபார்க்கும் அம்சத்தைக் கொண்டு மோசடிக்காரர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி பொதுமக்களைக் காவல்துறை அறிவுறுத்துகிறது.

மோசடிக்கான அறிகுறிகளைக் கண்டால் அதிகாரிகளிடம் அதுபற்றி தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது.

மோசடிகள் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற www.scamshield.gov.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம் அல்லது 1799 என்று எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

மோசடி தொடர்பான புகார் அளிக்க 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையத்தளத்தில் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்