ஈசூன் நார்த் அக்கம்பக்க காவல் நிலையம், ஈசூன் சவுத் நிலையத்துடன் டிசம்பர் 18ஆம் தேதி இணைகிறது.
அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்துவதில் காவல்துறையின் மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக அமையும் இந்த நடவடிக்கை சிறிய, அருகருகில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிலையங்களைச் சேர்ந்த வளங்களைத் திரட்டி, பெரிய தளமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“வெவ்வேறு அளவிலான சம்பவங்களைக் கையாளும் எங்கள் ஆற்றலை இது மேம்படுத்தும்,” எனக் காவல்துறை வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) கூறியது.
ஈசூனில் இரு காவல் நிலையங்கள் இணைவதால், சிங்கப்பூரில் உள்ள காவல் நிலையங்களின் எண்ணிக்கை 35லிருந்து 34ஆகக் குறையும். எண் 31 ஈசூன் சென்ட்ரலில் உள்ள தற்போதைய ஈசூன் நார்த் அக்கம்பக்க காவல் நிலைய வளாகத்தில் புதிய ஈசூன் அக்கம்பக்க காவல் நிலையம் அமையும்.
எண் 32 ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள ஈசூன் சவுத் அக்கம்பக்க காவல் நிலையம், நீ சூன் சவுத் அக்கம்பக்க காவல் சாவடியாக மாற்றப்படும். 2022 ஜனவரி முதல், இந்த நிலையம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
எண் 798 ஈசூன் ரிங் சாலையில் உள்ள தற்போதைய நீ சூன் சவுத் காவல் சாவடி, புதிய காத்திப் காவல் சாவடியாகும்.
2025க்குள் எட்டு புதிய காவல் சாவடிகள் கட்டப்படும் என பிப்ரவரி 19ஆம் தேதி காவல்துறை கூறியிருந்தது.

