சிங்கப்பூர் கடற்பகுதியில் இந்தோனீசியாவைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகளை சிங்கப்பூர் கடலோரக் காவல் படை இடைமறித்தது.
இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று துவாஸ் வட்டாரத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நிகழ்ந்தது.
அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு அந்தப் படகுகளில் இருந்தோரிடம் வலியுறுத்தப்பட்டது.
காலை 8.45 மணி அளவில் சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் இந்தோனீசியாவைச் சேர்ந்த பல மீன்பிடிப் படகுகள் பலமுறை வருவதும் போவதுமாக இருந்ததை கடலோரக் காவல் படை கவனித்தது.
அந்தப் படகுகள் சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் வருவதைத் தடுக்க தனது படகுளைக் கடலோரக் காவல் படை அனுப்பியது.
பிற்பகல் 1.20 மணி அளவில் இந்தோனீசிய மீன்பிடிப் படகுகளில் இரண்டு படகுகள் முதலில் இருந்ததை விட சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் இன்னும் உள்ளே வந்திருப்பது தெரியவந்தது.
அவற்றைக் கடலோரக் காவல் படையின் படகு இடைமறித்தது.
சிங்கப்பூர் கடற்பகுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, பிற்பகல் 1.40 மணி அளவில் அந்தப் படகுகள் சிங்கப்பூர் கடற்பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றன.
இந்நிலையில், சிங்கப்பூர் கடலோரக் காவல் படை அதிகாரியுடன் இந்தோனீசிய மீனவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர் படகிலிருந்து கடலில் விழுந்ததாகவும் இந்தோனீசியாவில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட இந்தோனீசியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாக்குவாதத்தின்போது சிங்கப்பூரின் கடலோரக் காவல் படை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து இந்தோனீசிய மீனவர் சங்கத்தின் தலைவர் அதிருப்தி தெரிவித்ததை அறிக்கை சுட்டியது.
சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் பாத்தாம் தீவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தொடர்புகொண்டு பேசி வருவதாக ஜனவரி 2ஆம் தேதியன்று சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூர்க் கடற்பகுதியில் இருக்கும்போது சிங்கப்பூர் அதிகாரிகளின் உத்தரவுக்கு உட்பட்டு நடந்துகொள்ளவேண்டும் என்று வெளிநாட்டு படகுகள், கப்பல்கள் ஆகியவற்றிடம் காவல்துறை கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூர்க் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தங்கள் பணியைத் தொடர்ந்து பொறுப்புள்ள, பாதுகாப்பான வகையில் செயல்படுத்துவர் என்று காவல்துறை உறுதி அளித்தது.

