மதுரையிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனக் காவல்துறை புதன்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தது.
சாங்கி விமான நிலையத்தில் அந்த விமானத்தில் பாதுகாப்புப் பரிசோதனையை நிறைவுசெய்த பிறகு காவல்துறை இதனைக் கூறியது.
சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த AXB684 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல்வழி தகவல் கிடைத்தது.
அந்த விமானத்தைப் பாதுகாப்பாக அழைத்து வர, சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை அதன் இரு எஃப்-15 வகை போர் விமானங்களை அனுப்பியது. இரவு 8.50 மணிக்கெல்லாம் வந்திறங்கி இருக்கவேண்டிய அந்த விமானம், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இரவு 10.04 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, வெடிகுண்டு மிரட்டல் குறித்து இரவு 8.25 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாகவும் விமானம் தரையிறங்கியதும் பரிசோதனையை தான் நிறைவு செய்ததாகவும் கூறியது.
இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாகவும் வேண்டுமென்றே பொதுமக்களுக்குப் பீதியை கிளப்பியோர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சொன்னது.
விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட்ரேடார்24’ (Flightradar24), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்குவதற்கு முன் சிங்கப்பூருக்கு கிழக்கே ஏறக்குறைய ஒரு மணி நேரம் வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் காட்டியது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் இரு எஃப்-15எஸ்ஜி வகை போர் விமானங்கள் திரட்டப்பட்டு, மக்கள் கூட்டம் இல்லாத பகுதிக்கு விமானத்தை வழிகாட்டியது. பின்னர் இரவு 10.04 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
“தரைவழி ஆகாயத் தற்காப்பு அமைப்புகளும் வெடிபொருளைச் செயலிழக்கச் செய்யும் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன,” எனக் குறிப்பிட்டார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சாங்கியில் தரையிறங்கியதும் விமான நிலையக் காவல்துறையிடம் அது ஒப்படைக்கப்பட்டதாக திரு இங் சொன்னார்.
“நம்மைச் சுற்றி அச்சுறுத்தல்கள் இருந்தாலும்கூட, நமது வீடுகளில் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படை, உள்துறைக் குழு இவ்விரண்டின் அர்ப்பணிப்புக்கும் நிபுணத்துவத்துக்கும் நன்றி,” என்றார் அவர்.
ஒரே நாளில் ஐந்து இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குறைந்தது ஐந்து இந்திய விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. இதனால் குறைந்தது இரண்டு விமானங்கள் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
அயோத்தியா சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது. அந்த விமானம் பின்னர் அவசரமாகத் தரையிறங்கியது.
புதுடெல்லியில் இருந்து சிகாகோவுக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு இணையம்வழி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவில் அது அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.