மனிதாபிமான உதவியுடன் நேப்பாளம் செல்லும் காவல்துறை: சிங்கப்பூர் அறிவிப்பு

மனிதாபிமான உதவியுடன் நேப்பாளம் செல்லும் காவல்துறை: சிங்கப்பூர் அறிவிப்பு

2 mins read
d6f40348-4ed3-4957-82e4-48d2b0c1256e
பெருவெள்ளத்திற்குப் பிறகு நேப்பாளத்தின் நுவகோட்டின் தேவிகாட் வட்டாரத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் இடிபாடுகளில் அவரவர் வீடுகளில் கிடைத்த சில பொருள்களைச் சேகரித்தனர். - படம்: ஏஎப்பி
Google News Preferred Icon

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேப்பாளத்திற்கு மனிதாபிமானப் பொருள்களையும் காவல்துறையின் அதிகாரிகளையும் அனுப்பிவைப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அறிவித்துள்ளது.

அங்கு நடந்துவரும் நிவாரணப் பணிகளுக்கு அது உதவியாக அமையும் என்று நேப்பாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கணலுடன் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அன்றைய தினம் பேசியபோது அதைத் தெரிவித்ததாக அமைச்சு கூறியது.

நேப்பாள அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி, சிங்கப்பூர் காவல்துறை அங்கு பணியமர்த்தும் குழுவில் பேரிடர்களில் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணும் சிறப்பு அதிகாரிகள் இடம்பெறுவர் என்று அமைச்சு விளக்கியது.

அதோடு, பொதுமக்களுக்குத் தேவையான உதவிப் பொருள்களுடன் சிங்கப்பூர் ஆயுதப்படையின் அவசரகால உபகரணங்களும் அங்கு அனுப்பிவைக்கப்படும்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் ஏற்கெனவே ஆகஸ்ட் 28ல் அறிவித்திருந்த S$127,000 நன்கொடையுடன் அந்த உதவிப்பொருள்கள் அனுப்பப்படும்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இதுவரை ஏறத்தாழ $1 மில்லியன் நிதியைப் பொதுமக்களிடம் நன்கொடையாகத் திரட்டியுள்ளது.

வெளியுறவு அமைச்சின் நெருக்கடி காலச் செயற்குழு ஆகஸ்ட் 27 முதல் நேப்பாளில் சிக்கியிருந்த சிங்கப்பூரர்களுக்குத் தூதரக உதவிகள் வழங்கும் பணியில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளது.

இதுவரை ஒன்பது சிங்கப்பூரர்கள் நேப்பாளத்தில் காணாமல்போனது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சார்பாக நேப்பாளத்திற்கு அனுதாபம் தெரிவித்த அமைச்சர் விவியன், பேரிடரை எதிர்கொள்ள அந்நாடு எடுத்துவரும் முயற்சிகளுக்கும் காணாமற்போன சிங்கப்பூரர்களை தேடுவதற்குச் செய்துவரும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நேப்பாள வெளியுறவு அமைச்சர் கணல், சிங்கப்பூருக்கு அந்நாட்டின் நன்றியைத் தெரிவித்துள்ளதையும் அமைச்சு குறிப்பிட்டது.

மனிதாபிமான உதவிகளை நேப்பாளத்திற்கு தொடர்ந்து வழங்க அந்நாட்டு அரசாங்கத்துடன் சிங்கப்பூர் அணுக்கமாகச் செயல்படும் என்பதையும் அமைச்சு தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்