மானபங்க வழக்கில் விசாரிக்கப்படும் காவல்துறை ஆய்வாளர்

மானபங்க வழக்கில் விசாரிக்கப்படும் காவல்துறை ஆய்வாளர்

படம்: சாவ்பாவ்

13 Feb 2026 - 6:04 pm

1 mins read

சிங்கப்பூர்க் காவல்துறையைச் சேர்ந்த காவல் நிலைய ஆய்வாளர், 25 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது முகமது ஜோப்ரி ஹர்பாவி என்ற ஆய்வாளர் ஹோட்டலில் இருந்ததாக நம்பப்படுகிறது.

2024ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி காலை 5.30 மணியளவில் பெண்ணின் உதட்டில் ஜோப்ரி முத்தமிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. கேலாங் சாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சம்பவம் நேர்ந்ததாக அது குறிப்பிட்டது.

பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி, பணியிலிருந்து விலகிய 43 வயது ஜோப்ரிமீது புதன்கிழமை (பிப்ரவரி 11) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஜோப்ரி குற்றம் புரிந்ததாகச் சந்தேகம் எழுந்ததை அடுத்து ஆடவருக்கு எதிரான விசாரணையைத் தொடங்கியதாகக் காவல்துறை தெரிவித்தது. மேலும் அவர் முன்னணி பணிகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

காவல்துறை அதிகாரிகள் சட்டத்தைக் கடைப்பிடித்து சிறந்த நன்னடத்தையுடனும் நேர்மையுடனும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர் என்றும் அவ்வாறு நடந்துகொள்ளாத அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறைப் பேச்சாளர் சொன்னார்.

ஜோப்ரியின் வழக்கு மார்ச் 4ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

மானபங்க வழக்கில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அதிகபட்சம் மூவாண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மானபங்கம்காவல்துறைஆய்வாளர்விசாரணைகுற்றச்சாட்டு