போன விஸ்தா ரயில் நிலைய சுரங்க நடைபாதைச் சுவரில் காணப்படும் கிறுக்கல்கள் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
வண்ணப் பூச்சுத் தெளிப்பானைப் பயன்படுத்தி செவ்வாய்க்கிழமை காலை யாரோ அந்தச் சுவரில் கிறுக்கியதாகத் தெரிகிறது.
சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் சென்றபோது காவல்துறை அதிகாரிகள் அங்கு காணப்பட்டதாகவும் அந்தச் சுவரில் இருந்த கிறுக்கல்களின் ஒரு பகுதி ஏற்கெனவே அழிக்கப்பட்டிருந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
சுவரில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்த உதவும் குழாய் (சிரிஞ்ச்), ‘டபிள்யூ’, ‘எஃப்’ எனும் ஆங்கில எழுத்துகளுக்கு இடையே சிக்கிய நிலையில் தூக்கிலிடப்பட்ட ஆடவரும் அந்தக் கிறுக்கல்களில் இடம்பெற்றிருந்ததாக அது கூறியது. ஆடவர் ‘$’ குறியீட்டைப் பற்றியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“If 1 syringe = 1 death = 1 hanged man HOW MANY 4 U SG GOV?” என்ற சொற்கள் சுவரில் கிறுக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்த மேல்விவரங்களுக்கு, நிலப் போக்குவரத்து ஆணையத்தைத் தொடர்பு கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
இவ்வாண்டு எம்ஆர்டி நிலையச் சுரங்கப்பாதைச் சுவரில் கிறுக்கப்பட்டது இது இரண்டாவது முறை. ஏப்ரல் மாதம் கென்ட் ரிட்ஜ் நிலைய சுரங்கப்பாதையில் காணப்பட்ட கிறுக்கல்கள் குறித்து ஆணையம், காவல்துறையிடம் புகாரளித்தது. பின்னர் குத்தகைதாரர் மூலம் அந்தக் கிறுக்கல்கள் அழிக்கப்பட்டன.


