சிங்கப்பூரை மையமாகக் கொண்ட இணைய வர்த்தகத் தளமான Qoo10 நிறுவனத்திடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
உள்ளூர் வர்த்தகங்களுக்குச் சென்றடைய வேண்டிய பணத்தை அந்நிறுவனம் இன்னும் கொடுக்கவில்லை என்றும் பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Qoo10 நிறுவனம் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் இன்னும் கிடைக்கவில்லை என்று சில வர்த்தகர்கள் புகார் செய்துள்ளனர்.
Qoo10 நிறுவனத்துக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தென்கொரியாவில் Qoo10 நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு தளங்கள் அந்நாட்டில் உள்ள வர்த்தகர்களுக்குச் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுக்காததை அடுத்து, இப்பிரச்சினை தலைதூக்கியது.
அந்த விவகாரம் குறித்து தென்கொரியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில், Qoo10 நிறுவனத்திடமிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் இன்னும் கிடைக்காததால் வர்த்தகர்கள் சிலர் விரக்தி அடைந்து தங்கள் பொருட்களை அந்தத் தளத்தில் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளனர்.
பணம் கேட்டு வர்த்தகர்கள் சிலர் அந்த நிறுவனத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் பணம் எப்போது செலுத்தப்படும் என்று அந்நிறுவனம் ஒழுங்காகப் பதிலளிக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் செப்டம்பர் 11ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் Qoo10 நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை உடனே தந்துவிடும்படி அந்நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தென்கொரியாவில் Qoo10 நிறுவனம் தொடர்பான நிகழ்வுகளை அரசாங்கம் மிக அணுக்கமாகக் கண்காணிப்பதாக அவர் தெரிவித்தார்.