ஜூரோங் வெஸ்ட்டில் மே 28ஆம் தேதி இரவு காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆடவர், அவருடன் பயணம் செய்த பெண், கார் ஓட்டுநரான 66 வயது ஆடவர் மூவரும் சுய நினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அது கூறியது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆடவர், அவருடன் பயணம் செய்த பெண் இருவருக்கும் வயது 36 என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 71க்கும் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து மே 28ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
கார் ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாக அது சொன்னது.
டிராஃபிக்ஸ் ஆக்சிடெண்ட்.எஸ்ஜியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் வலப்பக்கம் திரும்பிய காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் பயணம் செய்த பெண்ணும் சாலையில் தூக்கிவீசப்பட்டதைக் காணமுடிகிறது.
போக்குவரத்துக் காவல்துறையின் வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில், 2023ல் போக்குவரத்து விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை 136 என்றும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இது 25.9 விழுக்காடு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனமோட்டிகள் சரியாகக் கவனிக்காதது, வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது, உரிய கவனமின்றித் தடம் மாறியது போன்றவற்றால் விபத்துகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாகப் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.