பாரம்பரிய சீன மருத்துவ மருந்தகங்களின் பேரில் இயங்கியதாகக் கண்டறியப்பட்ட 11 சட்டவிரோத உடற்பிடிப்பு நிலையங்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பிப்ரவரி 7 முதல் ஏப்ரல் 14 வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் இது கண்டறியப்பட்டது.
உரிமம் பெறாத உடற்பிடிப்புச் சேவைகள், பாலியல் நடவடிக்கைகள் நடப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு கருத்து கிடைத்தது. அதையடுத்து 181 பாரம்பரிய சீன மருத்துவ மருந்தகங்களில் அமலாக்க நடவடிக்கைகள் கவனம் செலுத்தியதாக சனிக்கிழமை (ஜூன் 28) காவல்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பெரும்பாலான மருந்தகங்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடந்தது கண்டறியப்பட்டாலும், 11 கிளைகளில் பாரம்பரிய சீன மருத்துவராகச் சான்றளிக்கப்படாதவர்கள் வாடிக்கையாளர்களுக்கு உடற்பிடிப்புச் சேவை வழங்கியது தெரியவந்தது.
ஒரு கிளை பாலியல் சேவைகளை வழங்கியதும் கண்டறியப்பட்டது. மாதர் சாசனம் 1961ன்கீழ் ரகசியச் சந்திப்புக்கான இடம் ஒன்றை நிர்வகித்ததாக பெண் ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சட்டத்துக்கு உட்படாத அந்த 11 கிளைகளுக்கு எதிராக விசாரணை தொடர்கிறது.
பாரம்பரிய சீன மருத்துவக் கிளைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறியவும் அவற்றைத் தடுக்க வழக்கமான அமலாக்கப் பரிசோதனைகள் தொடரும் என்றும் காவல்துறை கூறியது.

