சக ஊழியர்களை மானபங்கப்படுத்திய காவல்துறை அதிகாரிமீது குற்றச்சாட்டு

சக ஊழியர்களை மானபங்கப்படுத்திய காவல்துறை அதிகாரிமீது குற்றச்சாட்டு

2 mins read
c7837b12-47c5-415a-8cfd-7ca77fd31aa0
அக்கம்பக்க காவல்நிலையத்தில் ஆறு சக ஊழியர்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டும் அந்த அதிகாரிமீது சுமத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிமீது, தமது சக ஊழியர்கள் உட்பட ஒன்பது அதிகாரிகளை அந்தரங்கமாகப் புகைப்படமெடுத்த சந்தேகத்தின்பேரில் வியாழக்கிழமை (ஜூலை 9) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த அதிகாரி அப்புகைப்படங்களை ஓர் அக்கம்பக்க காவல்நிலையத்திலும் இரண்டு உள்துறை குழுவின் வளாகங்களிலும் எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களைப் பாதுகாக்க, அந்த 24 வயது ஆடவரின் விவரங்களையும் சம்பவம் நடந்த இடங்கள் குறித்தும் தகவல் வெளியிட அனுமதியில்லை.

அவர்மீது 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மானபங்கம் செய்ததற்கும் மீதம் உள்ள பதினொன்றும் அந்தரங்கப் புகைப்படம் எடுத்ததற்கும் ஆகும்.

ஆறு அதிகாரிகளை அந்த ஆடவர் அக்கம்பக்க காவல்நிலையத்திலும் உள்துறைக் குழு வளாகத்திலும் குறிவைத்து செயல்பட்டுள்ளார். குற்றங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரையில் நடந்துள்ளன.

ஊடகத்துக்கு அளித்த அறிக்கையில் அந்த அதிகாரிமீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டது.

“அனைத்து காவல்துறை அதிகாரிகளும் சட்டத்தையும் உச்சநிலையான நன்னடத்தையையும் கட்டிக்காப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்தை மீறும் அதிகாரிகள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மேல் விவரங்களை வெளியிடாமல் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் வேறு எதையும் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

அந்தரங்கப் புகைப்படம் எடுத்த ஒவ்வொரு குற்றத்துக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் தனித்தனியாகவோ அல்லது அனைத்தையும் உள்ளடக்கி ஒன்றாகவோ விதிக்கப்படலாம்.

மானபங்கக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்துக்கும் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் பிரம்படி ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம். மூன்று தண்டனைகளும் சேர்ந்தும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்