மியன்மார் பணிப்பெண் கொலை வழக்கு: துன்புறுத்தல் பற்றி காவல்துறை அதிகாரி அறிந்திருந்தார்

மியன்மார் பணிப்பெண் கொலை வழக்கு: துன்புறுத்தல் பற்றி காவல்துறை அதிகாரி அறிந்திருந்தார்

3 mins read
83749970-fd48-46b2-a963-0c63d60909bf
மியன்மார் பணிப்பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி கெவின் செல்வம். - கோப்புப்படம்: லியான்ஹ வான்பாவ்
multi-img1 of 2

உடல் மெலிந்த தன்னுடைய இல்லப் பணிப்பெண் சாப்பிட்டுக்கொண்டே தூங்கி விழுந்ததால் எரிச்சலடைந்த 44 வயது கெவின் செல்வம், பணிப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து உயரே தூக்கினார்.

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய குற்றம் நிரூபணமானவரின் கணவரான முன்னாள் காவல்துறை அதிகாரி கெவின், வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் தனது வழக்கு விசாரணையின் முதல் நாளன்று முன்னிலையானார்.

அவரின் செயல் குறித்து நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி கெவின் காணப்பட்டார்.

நீண்டகால, கொடூரத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறுதியில் மாண்ட மியன்மார் நாட்டவரான 24 வயது பியாங் ங்காய் டான், பதிவுகளின்படி செல்வத்தின் கீழ் வேலை செய்து வந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஸ்டெஃபர்னி கோ தமது துவக்க உரையில் குறிப்பிட்டார்.

திருவாட்டி பியாங் ங்காய் டானின் மரணத்திற்குப் பின் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல் துறையிலிருந்து செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேண்டுமென்றே காயம் விளைவித்தல், திருவாட்டி பியாங் ங்காய் டானைப் பட்டினி போட்டு வேண்டுமென்றே துயர்காயம் விளைவிப்பதற்குத் துணை போதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் உள்பட நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் செல்வம் வழக்கு கோரியதாக அறியப்படுகிறது.

செல்வத்தின் குடும்பத்தில் பணிப்பெண்ணாக 2015ஆம் ஆண்டு மே மாதம் பியாங் ங்காய் டான் சேர்ந்தபோது அவரின் எடை 39 கிலோ. 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியன்று பணிப்பெண் மாண்டபோது அவர் வெறும் 24 கிலோ எடையில் இருந்தார்.

இதற்கிடையே, காவல் அதிகாரி ஒருவருக்குத் தவறான தகவல் அளித்த குற்றச்சாட்டையும் வீட்டில் நடந்த துன்புறுத்தல் சம்பவத்தைப் பதிவுசெய்த கண்காணிப்பு கேமராக்களை அகற்றிய குற்றச்சாட்டையும் எதிர்த்துச் செல்வம் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

செல்வத்தின் முன்னாள் மனைவியான 43 வயது காயத்திரி முருகையனுக்கு 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணிப்பெண் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ள ஆக நீண்ட சிறைக்காலம் இது என்று கூறப்படுகிறது.

அப்போது இருவரின் பிள்ளைகளின் வயது 1 மற்றும் 4 என்றும் செல்வமும் காயத்திரியும் 2020ல் மணவிலக்கு செய்துகொண்டனர் என்றும் அறியப்படுகிறது.

மகள் காயத்திரியுடன் சேர்ந்து பணிப்பெண்ணைத் துன்புறுத்திய 64 வயது பிரேமா எஸ்.நாராயணசுவாமிக்கு ஜனவரி மாதத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தங்களின் பீஷான் வீட்டில் இழைத்த குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதபடி ஆக்க செல்வத்தைத் தூண்டிய குற்றச்சாட்டை பிரேமா ஒப்புக்கொண்டதை அடுத்து அவரின் சிறைத் தண்டனை 17 ஆண்டுகளாக அதிகரித்தது.

திருவாட்டி பியாங் ங்காய் டானின் முதலாளியான செல்வம், தனது வீட்டில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் அறிந்திருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

“இறந்துபோனவர் தினமும் துன்புறுத்தலுக்கு ஆளானதை செல்வம் அறிந்திருந்தார் என்பதை ஆதாரங்கள் காட்டும். அந்தத் துன்புறுத்தலில் செல்வத்திற்கும் ஒரு பங்குண்டு என்பது தெரியவரும்.

“பணிப்பெண் இறக்கும்வரை காயத்திரியும் பிரேமாவும் இழைத்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததுடன் இறந்தவரின் நிலைமையை அறிந்தே அலட்சியப்படுத்தி இருந்தார் செல்வம்,” என்றார் அவர்.

போதுமான உணவின்றி உயிருக்கு அபாயகரமான சத்தின்மை நிலைக்குத் திருவாட்டி பியாங் ங்காய் டான் ஆளாகியிருந்ததைத் தான் அறிந்திருந்ததாக செல்வம் ஒப்புக்கொண்டிருந்தார்.

பணிப்பெண்ணின் உடல் எடை அதிகமாகக் குறைந்திருந்ததைத் தான் கவனித்ததாகவும் செல்வம் குறிப்பிட்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

பணிப்பெண்ணுக்கு உணவளிக்காமல் காயம் விளைவிக்க, செல்வம் துணைபோனதாக அவருக்கும் காயத்திரிக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களின் வழியாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்