மோசடி, மோசடிக்கு உதவுபவர்கள், சட்டவிரோத கட்டணச் சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்காக சந்தேகத்திற்குரிய 242 பேர் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
வேலை தேடித் தருதல், மின் வர்த்தகம், அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 1,100க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் $11.4 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை இழந்துள்ளனர்.
சந்தேக நபர்களில் 160 ஆண்களும் 82 பெண்களும் அடங்குவர். அவர்கள் 16 முதல் 73 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை ஏப்ரல் 4ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மார்ச் 21 முதல் ஏப்ரல் 3 வரையிலான இரண்டு வார நடவடிக்கையில் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதில் வர்த்தக விவகாரத் துறை, ஏழு காவல்துறை நிலப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஒருவர் தனது வங்கிக் கணக்கு அல்லது கைப்பேசி எண்ணை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கான கோரிக்கைகளை எப்போதும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கணக்கு அல்லது கைப்பேசி எண் குற்றங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் அவர்கள் அதற்குப் பொறுப்பானவர்களாகக் கருதப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
மோசடி மற்றும் இணையக் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டை விட, 2024ல் 10.8% அதிகரித்து 55,810 சம்பவங்களாக அதிகரித்துள்ளது என்று காவல்துறை முன்னர் இதுபோன்ற குற்றங்கள் குறித்த வருடாந்தர அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்தச் சம்பவங்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மோசடிகளால் ஏற்பட்டவை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த ஆண்டு குறைந்தது $1.1 பில்லியன் தொகையை இழந்துள்ளனர் என்றும் விவரிக்கப்பட்டது.
மோசடி சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness எனும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கலாம். மோசடிக் குற்றங்கள் தொடர்பான மேல் விவரங்களுக்கு www.scamshield.gov.sg எனும் இணையப் பக்கத்தை நாடலாம் அல்லது 1799 எனும் எண்ணை அழைக்கலாம்.