குவீன்ஸ்டவுனில் சாலையின் குறுக்கே மிதிவண்டி நிறுத்தப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை

2 mins read
dd216a68-d418-4523-bb67-670cb695b2d7
காமன்வெல்த் அவென்யூவின் குறுக்கே நிறுத்தப்பட்டுள்ள மிதிவண்டிகள். - படம்: ஜெரல்டின் லிம் ஃபேஸ்புக்

குவீன்ஸ்டவுனில் உள்ள ஒரு பெரிய சாலையில் போக்குவரத்தைத் தடுக்க மூன்று மிதிவண்டிகளை விட்டுச் சென்றதன் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஃபேஸ்புக் பயனாளர் ஜெரல்டின் லிம் பதிவிட்ட புகைப்படத்தில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) காமன்வெல்த் அவென்யூவில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள மிதிவண்டிகளைக் காட்டுகிறது. ஒவ்வொரு மிதிவண்டியும் மூன்று தடச் சாலையின் ஒவ்வொரு தடத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களால் அவற்றைக் கடந்து செல்ல இயலவில்லை.

அந்தப் பதிவின் படி, அன்று அதிகாலை 2 மணியளவில் படம் எடுக்கப்பட்டது. மிதிவண்டிகள் பல்வேறு மிதிவண்டி பகிர்வு நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகத் தெரிகிறது.

இந்தச் செயலை ‘ஆபத்தான குறும்பு’ என்று வர்ணித்த திருவாட்டி லிம், மிதிவண்டிகள் ஒரு தனியார் வாடகை வாகன ஓட்டுநரைக் கடுமையான முறையில் ‘பிரேக்’ போட வைத்ததாகவும், இதனால் அவரது பயணிகள் எடுத்துச் சென்ற உணவு வாகனத்தின் உட்புறம் முழுவதும் கொட்டியதாகவும் அப்பதிவில் கூறினார்.

ஓட்டுநர் பின்னர் இரண்டு மிதிவண்டிகளைச் சாலையில் இருந்து அகற்றினார் என்று கூறிய திருவாட்டி லிம், “ஆனால் கடைசி மிதிவண்டியில் ஒரு டாக்சி மோதுவதை நிறுத்த மிகவும் தாமதமானது,” என்றும் தெரிவித்தார்.

அதிகாலை 4.38 மணிக்கு பகிரப்பட்ட திருவாட்டி லிம்மின் பதிவு, மாலை 6.15 மணி நிலவரப்படி 900க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டு, மற்ற சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டது.

“இது ஒரு குறும்புச் செயல் அல்ல. உயிரை இழக்க வைக்கும் நாசவேலை,” என்று ஒரு ஃபேஸ்புக் பயனர் கருத்து தெரிவித்தார்.

விசாரிப்புகளுக்குப் பதிலளித்த காவல்துறை, இதன் தொடர்பில் ஒரு புகார் கிடைக்கப் பெற்றுள்ளது என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்