உடற்பிடிப்பு நிலையங்களுக்குக் கடுமையாகும் விதிகள்: காவல்துறை

உடற்பிடிப்பு நிலையங்களுக்குக் கடுமையாகும் விதிகள்: காவல்துறை

2 mins read
உடற்பிடிப்பு நிறுவனச் சட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்கள்: காவல்துறை
822a5c69-49bc-4942-b462-91221d036ef0
புதிய விதிமுறைகளின்படி, அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களும் ஒரே வகையாக, முறையான வாடிக்கையாளர் வசதிகளின் வடிவமைப்பை கடைப்பிடிக்க வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களும் கட்டாயமாக உரிமங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திறந்தவெளியில் செயல்படும் உடற்பிடிப்பு நிலையங்கள், பொதுமக்களின் பார்வையில் அங்கு நடைபெறும் நடவடிக்கைகள் தெரியும்படி வடிவமைக்கப்படவேண்டும் என்பதும் நினைவூட்டப்பட்டது.

எனவே, தனியறைகள், தடுப்புச் சுவர்கள், சிற்றறைகள் என்பதுபோன்ற அமைப்புகள் இனி அந்நிலையங்களில் தடை செய்யப்படும்.

தற்போதைய செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் எழுப்பிய அதிருப்தியை கருத்தில்கொண்டு, காவல்துறை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

திறந்தவெளியில் செயல்படும் உடற்பிடிப்பு நிலையங்களில் விதிமுறைகளுக்குப் புறம்பாக பாலியல் சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் உரிமங்கள் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டாலும் அவற்றின் விவரங்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

உடற்பிடிப்புச் சங்கங்கள், நிலையங்களின் உரிமையாளர்களுடன் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் காவல்துறை கூறியது. அதன்பிறகு இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குள் அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

அதன்படி, பொதுமக்களின் பார்வையில் படும் வகையில் அங்கு வழங்கப்படும் வசதிகள் ஒரே வகையாக, முறையாக வடிவமைக்கப்படவேண்டும். திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களுக்கான உரிம விலக்கு இனி வழங்கப்படாது.

அனைத்து நிலையங்களும் கடுமையான உரிம விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகிய அரசாங்க அமைப்புகளின் ஒப்புதலுடன் அத்தகைய நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.

திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்கள் அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்படவேண்டும். குறிப்பாக தனியறைகள், தடுப்புகள், ஒதுங்கும் பகுதிகள் இன்றி அவை வடிவமைக்கப்படவேண்டும்.

அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களிலும் ஊழியர்கள் சீருடை அணிவதை கட்டாயமாக்கவும் காவல்துறை விழைகிறது. சீருடை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிலையங்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்தது.

உடற்பிடிப்பு நிறுவனங்களுக்கான சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

மாற்றங்கள் அமலுக்கு வந்தபின்பு, தற்போது செயல்படும் திறந்தவெளி நிலையங்களுக்கு புதிய உரிமத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உட்பட்ட அரசாங்க அமைப்புகள் காவல்துறையுடன் அணுக்கமாகச் செயல்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாத உடற்பிடிப்பு நிலையங்களை ஒன்றிணைந்து ஒடுக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் அவரது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்