பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் கைப்பேசியை மறுஆய்வு செய்த காவல்துறையினர், அந்தக் கைப்பேசியைக் கூடுதல் புலனாய்வுக்கு உட்படுத்தவில்லை என்பதை நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒன்பதாவது நாளாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) நடைபெற்ற திரு சிங்கின் நீதிமன்ற விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதைத் தெரிவிக்க, தற்காப்புத் தரப்பு அதற்கு இணக்கம் தெரிவித்தது.
திரு சிங்கின் கைப்பேசியைக் காவல்துறையினர் மறுஆய்வு செய்ததாகவும் புலனாய்வுக்கு அதை உட்படுத்தவில்லை என்றும் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஆங் செங் ஹோங் நீதிமன்றத்தில் கூறினார்.
இதற்கிடையே, திரு சிங்கிற்கு எதிரான முதல் குற்றச்சாட்டின் தொடர்பில், எழுத்துபூர்வ சமர்ப்பிப்புகளை அக்டோபர் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்போவதாகத் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோய் கூறினார்.
நவம்பர் 1ஆம் தேதி அரசுத் தரப்பு தனது பதிலைத் தாக்கல் செய்யும் என்று வழக்கறிஞர் ஆங் கூறினார்.
எழுத்துபூர்வ சமர்ப்பிப்பைத் தற்காப்புத் தரப்பு அக்டோபர் 30ஆம் தேதி நண்பகலுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அரசுத் தரப்பு நவம்பர் 1ஆம் தேதி இறுதிக்குள் அதற்குப் பதிலளிக்கவேண்டும் என்றும் நீதிபதி லியூக் டான் உத்தரவிட்டார்.
இத்துடன், வியாழக்கிழமைக்கான விசாரணை முடிவுற்றது. அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

