பிரதமர் பேசுவது போன்ற மோசடிக் காணொளியைக் கைப்பற்றியது காவல்துறை

பிரதமர் பேசுவது போன்ற மோசடிக் காணொளியைக் கைப்பற்றியது காவல்துறை

2 mins read
3a9ae643-fdcd-4caa-81c8-79edbd840238
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடிக் காணொளியில் பிரதமர் லாரன்ஸ் வோங், அமைச்சர் இந்திராணி ராஜா, வெளிநாட்டுப் பிரமுகர்கள், தனியார் துறைத் தொழிலதிபர்கள் பங்கேற்றது போலக் காட்டப்பட்டிருந்தது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

பிரதமர் லாரன்ஸ் வோங் உட்பட மூத்த அரசாங்க அதிகாரிகள் பேசுவது போன்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி ‘சூம்’ காணொளியைச் சிங்கப்பூர்க் காவல்துறை கைப்பற்றியிருக்கிறது.

இதன் தொடர்பான மோசடியில் ஒருவர் ஐந்து மில்லியன் வெள்ளி வரை இழந்துள்ளார். ஹோர்முஸ் நீரிணைப் பிரச்சினையால் நிதித் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகையை அவர் மோசடிக்காரர்களுக்கு மாற்றியிருக்கிறார்.

இந்த விவரங்களைக் காவல்துறை சனிக்கிழமை (மே 16) அன்று வெளியிட்டது.

முதலில் அமைச்சரவைச் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் மோசடிக்காரரிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் தகவல் வரும். அதில் பிரதமருடான கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தனியார் துறைப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

பின்னர் சூம் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொடர்பு அனுப்பிவைக்கப்படுகிறது.

‘டீப்ஃபேக் ஏஐ’ தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட சூம் காணொளியில் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் உள்ளூர், வெளிநாட்டு அதிகாரிகளும் இருப்பது போன்று அதில் தெரியும்.

காவல்துறை கைப்பற்றிய காணொளியில் பிரதமர் லாரன்ஸ் வோங், அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் ஹோர்முஸ் நீரிணை பற்றிக் கலந்துரையாடுவது போல இருந்தது.

அதில் கனடாவின் வெளியுறவு அமைச்சர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அதிபரின் மூத்த அரசதந்திர ஆலோசகர், தனியார் துறையைச் சேர்ந்த பிளாக்ராக், துபாய் அனைத்துலக நிதி நிலையம் ஆகியவற்றின் பிரமுகர்களும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏமாற்றப்படும் நபர், தனியார் துறைப் பங்கேற்பாளர்களில் ஒருவராக கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார் எனக் காவல்துறை கூறியது.

பின்னர் வழக்கறிஞர் போல் காட்டிக்கொண்ட மோசடிக்காரர், தனியார் துறையைச் சேர்ந்தவர்களைத் தனித்தனியாகத் தொடர்புகொண்டு பணத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்வார்.

அதனை நம்பிய ஒருவர், குறைந்தது 4.9 மில்லியன் வெள்ளியை (3.8 மில்லியன் யுஎஸ் டாலர்) அனுப்பியிருக்கிறார்.

சென்ற வியாழக்கிழமை (14 மே) காவல்துறை வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பில் இதுபோன்ற மேலும் பல மோசடிச் சம்பவங்கள் வெளிவரக்கூடும் என எச்சரித்திருந்தது.

அரசு அதிகாரிகளுடன் முன்பே தொடர்புகொண்டிருந்த தொழிலதிபர்களை இத்தகைய மோசடிக்காரர்கள் குறிவைப்பதாகத் தெரிகிறது என்றும் காவல்துறை கூறியது.

மோசடிக் காணொளியை ஆராய்ந்ததில் அது ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

உதாரணமாக, பேச்சாளர்களின் குரல் அவர்களுடைய உதடு அசைவுடன் ஒத்துப் போகவில்லை. பேச்சாளர்களின் காணொளி முன்பே பதிவு செய்யப்பட்டு, பின்னர் போலியான குரல் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதக் காவல்துறை சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்