ஒழுங்குபடுத்தப்படாத கடன் ஆலோசனை நிறுவனங்கள் பற்றி காவல்துறை எச்சரிக்கை

ஒழுங்குபடுத்தப்படாத கடன் ஆலோசனை நிறுவனங்கள் பற்றி காவல்துறை எச்சரிக்கை

கோப்புப் படம்: சாவ்பாவ்

17 Nov 2026 - 1:48 pm

2 mins read

வங்கிக் கடன் பெற விரும்பி, விரைவாகப் பணம் கிடைக்கும் என உறுதியளிக்கும் விளம்பரங்களைக் கண்டு ஈர்க்கப்படுகிறீர்களா?

சந்தேகத்துக்குரிய மோசடிக் குற்றங்களுக்காக கடன் ஆலோசனை நிறுவனம் ஒன்று தற்போது விசாரணையில் இருப்பதைத் தொடர்ந்து, ஒழுங்குபடுத்தப்படாத கடன் ஆலோசனை நிறுவனங்கள் குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிடப்பட்ட ஆலோசனைக் குறிப்பில், நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் உட்பட தனிநபர்களை இத்தகைய நிறுவனங்கள் அணுகி, பெரிய அளவிலான தனிப்பட்ட வங்கிக் கடன்களைப் பெற்றுத் தருவதாக கூறி வருகிறார்கள் எனப் புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வழக்குகளில், நிதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக தங்கள் வருமான விவரங்களை மிகைப்படுத்திக் காட்டுமாறும் வருமான வரி மதிப்பீட்டு அறிக்கைகளைத் திருத்துமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழங்கப்படும் கடன் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டைக் கட்டணமாக இத்தகைய கடன் ஆலோசனை நிறுவனங்கள் வழக்கமாக வசூலிக்கும் எனக் காவல்துறை கூறியது.

“இத்தகைய சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களால் செலுத்த முடியாத அதிகப்படியான மாதாந்தரக் கடன் தவணைகளாலும் தவறான வருமான விவரங்களைத் தெரிவித்ததால் ஏற்படும் அதிகப்படியான வருமான வரிச்சுமையாலும் சிக்கித் தவிக்கின்றனர்,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தகைய நிறுவனங்களின் அழுத்தத் தந்திரங்களையும் எதிர்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட சிலர் புகார் அளித்துள்ளனர்.

இத்தகைய நிறுவனங்களால் அணுகப்பட்ட அல்லது அவற்றின் சேவைகளை ஏற்கெனவே பயன்படுத்தியவர்கள், காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கடன் ஆலோசனை நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்படாதவை. குற்றங்களுக்கு இலக்காவதைத் தவிர்க்க, கடன் தொடர்பான விசாரணைகளுக்குச் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிதி நிறுவனங்கள் கோப்பகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமம்பெற்ற நிதி நிறுவனங்களை நேரடியாக அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், மூன்றாம் தரப்பினரின் அறிவுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும், எந்தவோர் அரசாங்க அமைப்புக்கோ அல்லது நிதி நிறுவனத்துக்கோ தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட வருமானத் தகவல்களைப் பொதுமக்கள் ஒருபோதும் வழங்கக் கூடாது.

சமூக ஊடகங்கள், இணைய விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது பிற தளங்கள் மூலமாகத் தங்கள் தகுதிக்கு மீறிய கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறும் இந்நிறுவனங்கள் குறித்தும் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இத்தகைய நிறுவனங்களால் அணுகப்பட்டவர்கள் அல்லது அழுத்தத் தந்திரங்களுக்கு உள்ளானவர்கள் காவல்துறையில் புகார் அளிக்குமாறும் 1800-255-0000 என்ற காவல்துறை அவசர எண்ணை அழைக்குமாறும் அல்லது police.gov.sg/i-witness என்ற இணையத்தளத்தில் தகவல்களைச் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைகடன்ஆலோசனை