பாட்டாளிக் கட்சியின் கொள்கைகள் காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப மாறுவதாகப் பிரதமர் வோங் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) காலை கூறியிருந்தார்.
பிரதமர் வோங்கின் விமர்சனங்களுக்கு ஃபேஸ்புக் பதிவு மூலம் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் பதிலளித்துள்ளார்.
“முன்பு தவறாக இருந்த ஒரு கொள்கையை மாற்றுவது சந்தர்ப்பவாதமல்ல. அது ஓர் அரசியல் கட்சியின் விவேகம், முதிர்ச்சியின் அடையாளம்,” என்று ஜேமஸ் லிம் கூறியுள்ளார்.
“ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும், கருத்துகளைத் திறந்த மனதுடன் ஏற்பது அவசியம்,” என்றும் அவர் கூறினார்.
மக்கள் செயல் கட்சியும் கடந்த காலங்களில் பல கொள்கைகளை மாற்றியுள்ளதாக ஜேமஸ் லிம் அவரது பதிவில் சுட்டிக்காட்டினார்.
இரண்டு குழந்தைகள் கொள்கை, வேலையின்மைக் காப்பீடு, உள்ளூர் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், 377A சட்டப்பிரிவு ரத்து ஆகியவற்றை அவர் உதாரணங்களாகக் கூறினார்.
வீடமைப்பு விவகாரத்தில் பாட்டாளிக் கட்சியின் பழைய நிலைப்பாடு குத்தகைத் தேய்மானம் என்ற நீண்டகாலப் பிரச்சினை தொடர்பானது என்று ஜேமஸ் லிம் தமது பதிவில் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குத் தடையல்ல என்றும், உள்கட்டமைப்பு அழுத்தங்களைக் கருத்தில் கொண்டே பாட்டாளிக் கட்சியின் கருத்து அமைந்ததாக அவர் கூறினார்.
“கொள்கை முரண்பாடுகளைத் தாண்டி, அரசியல் கட்சிகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்கள் கொள்கைகளை மேம்படுத்தும் மற்றும் பொருத்தமானதாக வைத்திருக்கும். காலாவதியான கொள்கைகளை நாம் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது,” என்று திரு ஜேமஸ் லிம் தமது பதிவில் தெரிவித்தார்.
