கொள்கை வகுப்பாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து பொதுச் சேவைகளை வடிவமைக்க வேண்டும்: பிரதமர் வோங்

கொள்கை வகுப்பாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்து பொதுச் சேவைகளை வடிவமைக்க வேண்டும்: பிரதமர் வோங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Nov 2026 - 9:54 pm

2 mins read

தொழில்நுட்பம் என்பது கொள்கை உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே ஓர் அங்கமாக இருக்க வேண்டும். அது ஏதோ பிந்தைய சிந்தனையாக இருக்கக்கூடாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங், வியாழக்கிழமையன்று (நவம்பர் 5) தெரிவித்தார்.

பொதுச் சேவையில் ஒரு மனநிலை மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கொள்கை வகுப்பாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கொள்கைகளை உருவாக்கிய பிறகு தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, மிக முன்னதாகவே ஒன்றிணைந்து நெருக்கமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் மின்னிலக்க மாற்றத்தின் அடுத்த கட்டத்தை விவரித்த அவர், “ஏற்கெனவே நிலைபெற்ற பழக்கவழக்கங்களையும் பணிபுரியும் முறைகளையும் மாற்றுவதற்கு காலம் எடுக்கும். ஆனால், நாம் செல்ல வேண்டிய திசை தெளிவாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இந்த மாற்றத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் இதன் மூலம் பொதுச் சேவையில் உள்ள அதிகாரிகள் சிறந்த தீர்வுகளை உருவாக்க அதிகாரமளிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் வோங் கூறினார்.

“சில நேரங்களில், மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை விட, எளிமையான கொள்கையே சிறந்த தீர்வாக அமையும்,” என்று கூறிய அவர், இத்தகைய மனநிலை மாற்றம் சிங்கப்பூர் மக்களுக்குச் சிறந்த பலன்களைத் தரும் என்று தெரிவித்தார்.

“இதுதான் கொள்கை, இதைச் செயல்படுத்த தகவல் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று கேட்பதற்குப் பதிலாக, நாம் எதை அடைய முயல்கிறோம்? அதைச் சிறந்த முறையில் நிறைவேற்ற, கொள்கையையும் தொழில்நுட்பத்தையும் எவ்வாறு இணைந்து வடிவமைக்கலாம் என்று நாம் கேட்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

“இது சாத்தியமான ஒன்றுதான்,” என்று மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற, அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் (கவ்டெக்) 10வது ஆண்டு நிறைவு விருந்து நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (அக்ரா), ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்படும்போது விதிக்கப்படும் அபராதங்களுக்கு 33 வெவ்வேறு நடைமுறைகள் இருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சிக்கலான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொழில்நுட்ப அமைப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, அந்த 33 நடைமுறைகளும் நான்காகக் குறைக்கப்பட்டன.

“இதன் விளைவாக, கொள்கை எளிமையானது, தொழில்நுட்ப அமைப்பும் எளிமையானது, மேலும் சிறந்த பலன்களும் கிடைத்தன,” என்று பிரதமர் வோங் விவரித்தார்.

எனவே, அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்பத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் கொள்கைகளை வடிவமைக்கும்போது அவர்கள் அதைக் கருத்தில் கொள்ள முடியும்.

“சரியான கேள்விகளைக் கேட்பதற்கான உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ளவும் அதன் சாத்தியக்கூறுகள், வரம்புகளை உணர்ந்துகொள்ளவும் மேலும் சிறந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்குத் தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்லாரன்ஸ் வோங்தொழில்நுட்பம்