தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

12 தொகுதிகளில் வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றம்

2 mins read
c5abd37c-8957-46d6-9b13-db07244a83a9
கடந்த 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலை முன்னிட்டு 12 தொகுதிகளில் வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது, தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு, சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 2023ஆம் ஆண்டு ஜூன் மாதமும் சென்ற ஆண்டு ஜூன் மாதமும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து ஒன்பது தொகுதிகளில் கூடுதலான வாக்களிப்பு வட்டாரங்கள் உள்ளன. அந்த ஒன்பது தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வாக்காளர் எண்ணிக்கை கூடியுள்ளது.

எஞ்சிய மூன்று தொகுதிகளில் இருக்கும் வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

வாக்களிப்பு வட்டாரங்கள் என்பவை, ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் கூடுதல் பிரிவுகளாகும். ஒவ்வொரு வாக்களிப்பு வட்டாரத்திலும் குறைந்தது ஒரு வாக்களிப்பு நிலையமாவது இருக்கும்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஏற்பாட்டுப் பணிகளில் இந்த மாற்றங்கள் அடங்கும். இவை, இம்மாதம் 14ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டன.

அல்ஜுனிட், ஈஸ்ட் கோஸ்ட், ஹாலந்து-புக்கிட் தீமா, ஜூரோங், மரீன் பரேட், பாசிர் ரிஸ்-பொங்கோல், தெம்பனிஸ், தஞ்சோங் பகார், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிகள் மற்றும் ஹோங் கா நார்த், பொத்தோங் பாசிர், இயோ சூ காங் தனித்தொகுதிகள் ஆகியவற்றில் வாக்களிப்பு வட்டார மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. மரீன் பரேட், தெம்பனிஸ், தஞ்சோங் பகார் குழுத்தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகள் எல்லாவற்றிலும் வாக்களிப்பு வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மாற்றங்கள், தொகுதி எல்லைகள் மீண்டும் வரையப்படுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. அதேவேளை, தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அடுத்த அறிக்கை வரையப்படும்போது இந்த மாற்றங்கள் கருத்தில்கொள்ளப்படும்.

ஒரு தொகுதியில் வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டால் வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையங்கள் மாறலாம்.

மக்கள்தொகையில் காணப்படும் மாற்றங்கள், வாக்களிப்பு நிலையங்களை வாக்காளர்களின் வசதிக்காக கூடுதல் அருகாமையில் இருக்கும் வகையில் அமைப்பது, ஒவ்வொரு வாக்களிப்பு வட்டாரத்திலும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக வாக்களிப்பு வட்டாரங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி, தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு ஒன்று கூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளில் வாக்களிப்பு வட்டார மாற்றங்கள் அடங்கும்.

அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. வரும் நவம்பர் மாதத்துக்குள் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும்.

குறிப்புச் சொற்கள்