ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-கல்வித் திட்டத்தில் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகளுக்கு ஊதிய உயர்வு கிடைத்ததாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 22 ஆம் தேதி) வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்ற பட்டதாரிகள் திட்டத்தில் இணையாமல் வேலைக்கு நேரடியாகச் சென்ற பட்டதாரிகளைவிட உயர்ந்த சம்பளம் பெற்றதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை ஆட்ரி லிங், டேமியன் டான் ஆகிய இரு பொருளியல் வல்லுநர்கள் மேற்கொண்டனர். ’டபிள்யூஎஸ்-போஸ்ட்டிப்’ (WSPostDip) என்ற இந்த வேலை-கல்வித் திட்டத்தை முடித்த பின் அடுத்த ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளில் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் கிட்டத்தட்ட 9 விழுக்காடு சம்பள உயர்வு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பட்டதாரிகள் அதற்கடுத்த ஈராண்டுகளில் 6 விழுக்காடு வரை சம்பள உயர்வு பெற்றதாகவும் ஆய்வு விளக்கியது.
இதேபோல் தொழில்நுட்பக் கல்விக் கழக பட்டதாரிகள் இந்த வேலை-கல்வித் திட்டத்தை முடித்த பின் அடுத்த ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 11 விழுக்காடு சம்பள உயர்வு பெற்றதாக ஆய்வு சுட்டியது. இந்த சம்பள உயர்வு அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் நீடித்ததாக ஆய்வு கூறுகிறது.
இதில் ‘டபிள்யூஎஸ்செர்ட்’ (WSCert programme) என்ற திட்டத்திலும் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றபோதிலும், ஆய்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சிறியது என்பதால், இந்தத் திட்டத்தின்வழி அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சம்பள உயர்வு குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
’டபிள்யூஎஸ்பி-போஸ்ட்டிப்’, ‘டபிள்யூஎஸ்செர்ட்’ திட்டத்தில் 2018ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை பட்டம் பெற்றவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இனி, கல்வி அமைச்சு அந்தந்த துறைகள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வேலை-கல்வித் திட்டத்தை, குறிப்பாக அதிகத் தேவை, அதிகத் திறன் சார்ந்த வேலைகளுக்கு, தொடர்ந்து விரிவுபடுத்துவதுடன் மேம்படுத்தவும் செய்யும் என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.