உலோகம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் திரும்பப் பெறப்படும் பாம்பெர்ரி சாக்லெட்-பழப் பொருள்கள்

உலோகம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் திரும்பப் பெறப்படும் பாம்பெர்ரி சாக்லெட்-பழப் பொருள்கள்

படங்கள்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

30 Oct 2026 - 9:35 am

1 mins read

‘பாம்பெர்ரி’ முத்திரையின்கீழ் விற்பனையாகும் சாக்லெட் பூசப்பட்ட பல்வேறு பழப் பொருள்களில் உலோகம் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நான்கு வகையான பொருள்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

‘டார்க் சாக்லெட்’ மற்றும் ‘ஒயிட் அண்ட் மில்க் சாக்லெட்’ சுவைகளைக் கொண்ட ‘பாம்பெர்ரி நேச்சுரல் புளூபெர்ரிஸ் + பெல்ஜியன் சாக்லெட்’, ‘ஒயிட் அண்ட் டார்க் சாக்லெட்’ மற்றும் ‘ஒயிட் அண்ட் மில்க் சாக்லெட்’ சுவைகளைக் கொண்ட ‘பாம்பெர்ரி நேச்சுரல் ராஸ்ப்பெர்ரிஸ் + பெல்ஜியன் சாக்லெட்’ ஆகியவை அவை. அந்தப் பொருள்கள் 150 கிராம் எடைகொண்ட பொட்டலங்களில் விற்கப்படுபவை.

2028 ஜனவரி 20 வரை காலாவதித் தேதி குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களுக்கு, இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கை பொருந்தும்.

ஆஸ்திரேலிய நியூசிலாந்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் முந்தைய நடவடிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக இவற்றைத் திரும்பப் பெறுமாறு இறக்குமதியாளரான ‘லிட்டில் ஃபார்ம்ஸ்’ நிறுவனத்திற்குச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. தற்போது அவற்றைச் சந்தையிலிருந்து அகற்றும் பணி தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட பொருள்களை வாங்கியோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே உட்கொண்டு உடல்நலக் குறைவு குறித்துக் கவலைப்படுவோர் மருத்துவ ஆலோசனையை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர் அப்பொருள்களை வாங்கிய விற்பனை நிலையங்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அமைப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்