தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
அதற்காக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது என்று புதன்கிழமை (ஜனவரி 7) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.
விக்னேஷ் பால்பண்ணையிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) கிட்டத்தட்ட 7 கால்நடைகள் லிட்டில் இந்தியா வட்டாரத்தின் ஹேஸ்டிங்ஸ் சாலையில் ஊர்வலம் செல்லும்.
தொடர்ந்து சனிக்கிழமை (ஜனவரி 10) ‘பொலி’ திறந்தவெளியில் பொங்கல் ஒளியூட்டு விழா நடைபெறும். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் கலந்துகொள்வார்.
சிறப்பு முயற்சியாக, இவ்வாண்டு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பள்ளி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த நிகழ்ச்சிகள் ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ‘பொலி’ திறந்தவெளியில் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மூன்று அங்கங்களாக பிரிக்கப்படும். இதன்வழி, மாணவர்கள் பொங்கல் சார்ந்த நடனங்கள், பாடல்கள், குறும்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் படைப்பர்.
இந்தப் பள்ளி நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ 1,000 மாணவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாக லிஷா தெரிவித்தது.
“ஒரு தேசமாக வளரும்போது, நமது பாரம்பரியக் கொண்டாட்டங்களின் அர்த்தத்தை இழக்கக்கூடாது,” என்று சொன்னார் லிஷா அமைப்பின் கௌரவச் செயலாளர் ருத்ராபதி.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நிகழ்ச்சியின்மூலம் நம் மாணவர்கள் பொங்கல் திருநாளின் பாரம்பரியம், பின்னணி, கலாசாரத்தைக் கற்றுக்கொள்வார்கள்,” என்றும் அவர் கூறினார்.
பொங்கல் திருநாளன்று தமிழ் மக்கள் மட்டுமின்றி ‘பொலி’ திறந்தவெளிக்கு வரும் அனைவருக்கும் இலவச சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.
மறுநாள் (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் நாளன்று கால்நடைகளுக்கென சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும்.
சனிக்கிழமை (ஜனவரி 17) சிறுவர்களுக்காக ‘பொலி’ திறந்தவெளியில் வண்ணம் தீட்டும் போட்டி ஒன்றும் நடைபெறும்.
அதே நாளில் ‘தேக்கா பிளேஸ்’ வளாகத்தில் பொங்கல் பானை அலங்கரிப்புப் பட்டறையும் இடம்பெறும்.
சிங்கப்பூர் இந்தியர் சங்கம், லிஷாவுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) ஒரு மாபெரும் கூட்டுப் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூர் இந்தியர் சங்க வளாகத்தில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 50 பானைகளில் பொங்கலிடப்படும். அழகாக அலங்கரிக்கப்படும் பானைக்கும் விரைவாகச் சமைக்கப்ப்டும் பொங்கலுக்கும் ரொக்கப் பரிசுகள் உண்டு.
பொங்கல் செய்ய தேவையான அனைத்து பொருள்களும் வழங்கப்படும்.
சிராங்கூன் சாலையில் ஜனவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவசமாக பொங்கல் வழங்கப்படும்.
‘பொலி’ திறந்தவெளியில் ‘மண்வாசனை கலாசார நிகழ்ச்சி’ ஒன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) மற்றும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) இரவு 7 மணி முதல் மக்களை மகிழ்விக்கும்.
மேலும், ஜனவரி 16, 17, 23, 24 மற்றும் பிப்ரவரி 5, 6, 7, 8 தேதிகளில் ‘பிக் பஸ் டூர்’ எனும் ‘திறந்த பேருந்தில் வலம்வருதல்’ அங்கம் ஆர்ச்சர்ட் விடுதியிலிருந்து தொடங்கும். பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த தனித்துவமான பண்பாட்டுச் சுற்றுலா அனுபவம் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கிடைக்கவிருக்கிறது.
அந்தச் சுற்றுலாவிற்கான கட்டணம், ஒருவருக்கு $15.
லிஷா ஏற்பாட்டில் இடம்பெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://www.pongal.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

