தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சேதமடைந்த கப்பல்: தடுப்பு மிதவைகளைப் போடுவது பருவநிலையால் தாமதமானது’

2 mins read
3aa2a068-9d2f-4b05-b5ba-dfc01e76e7cc
ஜூன் 21ஆம் தேதி செந்தோசாவின் சிலோசோ கடற்கரைக்கு அருகே கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அண்மைய எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தில் சேதமடைந்த எண்ணெய்க் கப்பலைச் சுற்றித் தடுப்பு மிதவைகளைப் போடும் பணி மோசமான வானிலையால் தாமதமானதாகக் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்த இரவு நேரத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், வழக்கத்தைவிட மூன்று மடங்குக்கு மேல் நேரம் பிடித்ததாக எண்ணெய்க் கசிவுத் துப்புரவுக் குத்தகை நிறுவனம் கூறியது.

முதல் நிலைத் தடுப்புகளை நிறுவும் பணி முடிவடைய, எண்ணெய்க் கசிவு தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 10 மணி நேரமானதாக டி அண்ட் டி சேல்வேஜ் ஏஷியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேப்டன் அனுஜ் சஹாய் கூறினார்.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அவரது நிறுவனத்தை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

ஜூன் 14ஆம் தேதி, நெதர்லாந்துக் கொடியை ஏந்திய தூர்வாரிக் கப்பல் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கொடி தாங்கிய எண்ணெய்க் கப்பலை மோதி, சேதப்படுத்திய சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக கேப்டன் சஹாய் கூறினார்.

சேதமடைந்த கப்பலைச் சுற்றி 200 மீட்டர் நீளமுள்ள தடுப்பு மிதவைகள் போடப்பட்டன. மிதவைகளில் காற்றை நிரப்பிய பிறகு, ஒவ்வொரு 3 மீட்டர் பகுதியும் 100 கிலோ எடையைக் கொண்டிருக்கும்.

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் தெளிவாகப் பார்க்க முடியாததுடன், ஊழியர்கள் கீழே விழுந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால் தடுப்பு மிதவைகளை இடுவதற்கு வழக்கத்தைவிடக் கூடுதல் நேரமானதாகக் கூறப்பட்டது.

வானிலை வழக்கநிலையிலிருந்தால் 200 மீட்டர் தடுப்பு மிதவையைப் போட ஏறக்குறைய ஒரு மணி நேரம்தான் ஆகும் என்றார் கேப்டன் சஹாய்.

Watch on YouTube

கெப்பெல் மரினா, செந்தோசா கோவ் ஆகியவற்றிலும் ஜூன் 15ஆம் தேதி டி அண்ட் டி நிறுவனம் தடுப்பு மிதவைகளைப் போடும் பணியில் ஈடுபட்டது. சேதமடைந்த எண்ணெய்க் கப்பலைச் சுற்றி அடுத்த சில நாள்களில் கூடுதல் மிதவைகள் போடப்பட்டதாக அது கூறியது.

தடுப்பு மிதவைகள், கடலில் சிந்திய எண்ணெய் நீர்ப்பரப்பில் அதிகம் பரவாமல் தடுத்து நிறுத்தும். பின்னர் இயந்திரங்களின் உதவியுடன் அந்த எண்ணெய்யைச் சேகரித்து அப்புறப்படுத்த இது வகைசெய்யும்.

குறிப்புச் சொற்கள்