உலகெங்குமுள்ள கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஃபிரான்சிஸ், தமது ஆசியப் பயணத்தின் இறுதிக்கட்டமாக சிங்கப்பூர் வந்துள்ளார்.
87 வயதாகும் அவர், செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் தமது சிறப்பு விமானத்தில் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார்.
முன்னதாக, தீமோர் லெஸ்டேயின் டிலி நகர விமான நிலையத்திலிருந்து செப்டம்பர் 11ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு அவர் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வந்துள்ள போப் ஃபிரான்சிசை கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், அவரது மனைவி, சிங்கப்பூரிலேயே தங்கிப் பணியாற்றும் வத்திகனுக்கான சிங்கப்பூர்த் தூதர் ஜேனட் ஆங் ஆகியோர் வரவேற்றனர்.
ஏர்போர்ட் பொலிவார்டில் அமைந்துள்ள ‘ஜுராசிக் மைலில்’ போப்பின் வருகைக்கான சிறப்பு ஏற்பாடுகளில் பங்குவகிக்கும் ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களை அவர் சந்திப்பார் எனக் கூறப்பட்டது.
மாலை நேரத்தில் பொங்கோலில் உள்ள செயிண்ட் ஃபிரான்சிஸ் சேவியர் ரிட்ரீட் நிலையத்தில் உள்ள இயேசு சங்கத்தினரை போப் சந்திப்பார்.
செப்டம்பர் 12ஆம் தேதி அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் அவர் சந்திப்பார்.
பின்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பொது உரை ஆற்றுவார் என்றும் தேசிய விளையாட்டரங்கில் 50,000 கத்தோலிக்கர்கள் கலந்துகொள்ளும் பிரார்த்தனைக் கூட்டத்தை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
போப் ஃபிரான்சிஸ், செப்டம்பர் 13ஆம் தேதி, பல சமயங்களைச் சார்ந்த இளையர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்பார். பின்னர் அவர் ரோம் நகருக்குத் திரும்புவார்.
செப்டம்பர் 2ஆம் தேதி, போப் தமது ஆசியப் பயணத்தைத் தொடங்கினார். பயணத்தின்போது பாப்புவா நியூ கினி, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கும் அவர் சென்றிருந்தார்.
1986ஆம் ஆண்டுக்குப் பிறகு போப் ஒருவர் சிங்கப்பூருக்கு வருவது இதுவே முதல்முறை. 1986ல் அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால், சிங்கப்பூரில் ஐந்து மணி நேரம் தங்கியிருந்தார்.