தொழில்நுட்பத்தால் ஒருவர் தமது சொந்த வட்டத்திற்குள் தங்கியிருப்பது எளிது என்றாலும் இளையர்கள் தங்களுக்குள் தைரியத்தை வளர்த்து இடர்களை எதிர்கொள்ளவேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார்.
கத்தோலிக்க தொடக்கக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற சமய நல்லிணக்கக் கலந்துரையாடலில் போப் ஃபிரான்சிஸ் இத்தாலிய மொழியில் உரையாற்றினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தைரியமாகப் பேசி வாழ்க்கையில் சுய பாதையை உருவாக்க ஊக்குவித்த போப், சமூக ஊடகத்தின் நன்மை தீமைகளைப் பற்றி விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.
“முயற்சி மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லத் தயங்கும் ஓர் இளையர், முதியவரே,” என்றார் அவர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கும் சிங்கப்பூரின் பேராயர் வில்லியம் கோவும் போப்பை உபசரித்தனர்.
சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் அனுபவத்தை மூன்று இளம் தலைவர்கள் போப்புடன் பகிர்ந்தனர். இவர்களில் ஒருவரான ஷுகுல் ராஜ் குமார், 28, குறைகூறல்களுக்கு மத்தியில் இத்தகைய கலந்துரையாடலுக்கான பாதுகாப்பான இடத்தை உருவாக்குவது பற்றி பேசினார். செயலில் இறங்காமல் குறைகூறும் பலரைப் பற்றியும் திரு ராஜ் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த போப் ஃபிரான்சிஸ், இளையர்கள் விமர்சகர்களாக இருக்கவேண்டும். என்றாலும் அவர்கள் ஆக்கபூர்வமாக விமர்சிக்க வேண்டும் என்றார்.
“நீங்கள் விமர்சிக்கும்போது உங்களுக்கு இருக்கும் தைரியம், நீங்கள் விமர்சிக்கப்படும்போது உங்களுக்கு உள்ளதா,” என்று அவர் கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் பிறரை விமர்சித்தால் அவர்களும் உங்களை விமர்சிக்கலாம். இதுவே இளையர்களுக்கு இடையிலான உளமார்ந்த கலந்துரையாடலுக்கான வழி,” என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் பலருக்கு, குறிப்பாக இளையர்களின் தொடர்புகளுக்கு வசதி அளித்திருக்கிறது. ஆயினும், சமூக ஊடகங்களுக்காக மட்டும் வாழும் இளையர் இந்தத் தொடர்பு முறைக்கு அடிமையாகிறார்,” என்று அவர் கூறினார்.
“எந்த வகையான இளையர் அவர்? கவனச்சிதறல் உள்ளவராகத்தான் இருப்பார்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் இளையர்கள் பல சமயக் கலந்துரையாடலில் ஈடுபடும் திறனைக் கண்டு வியப்பதாகவும் போப் கூறினார்.
“நம் வாழ்க்கையில் இளமை, துணிச்சலுக்கான காலகட்டம். இந்தத் துணிச்சலை உங்களுக்குப் பயனற்ற விவகாரங்களுக்குப் பயன்படுத்தலாம் அல்லது அந்தத் துணிச்சலைப் பயன்படுத்தி முந்திக்கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபடலாம்,” என்று அவர் கூறினார்.
போப் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் டோங், இணக்கமான சிங்கப்பூருக்கு இன நல்லிணக்கம் அடித்தளத்தை அமைப்பதாகக் கூறினார்.
“பன்முகத்தன்மையிலிருந்து பலத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு அரசாங்கம் சட்டங்களையும் கொள்கைகளையும் கட்டமைப்புகளையும் அமைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
போப் ஃபிரான்சிஸ் சமயத்தைக் கடந்து இளையர்களையும் உலக விவகாரங்களையும் பற்றி பேசும்போது அனைவரின் விழிப்புணர்வு அதிகரிப்பதாக கத்தோலிக்க தொடக்கக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் ராணாசந்திரா, 17, தமிழ் முரசிடம் கூறினார்.
இந்தக் கருத்துக்கு இணங்கிய கவிணேஷ் மணிவண்ணன், 18, கத்தோலிக்க சமயத் தலைவரான போப் ஃபிரான்சிஸ், பிற சமயங்களையும் அறிவதற்கு முயற்சி எடுப்பதால் அவரைப் பெரிதும் மதிப்பதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பல பள்ளிகள் இருந்தும் தமது கல்லூரிக்குப் போப் வருகை அளித்ததை எண்ணி அகமகிழ்வதாக அமிர்தா வீரமகேந்திரன், 17, கூறினார்.
சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்த போப், வெள்ளிக்கிழமை மதியம் ரோம் நகருக்குப் புறப்பட்டார்.