தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலி968 பிரபலம் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

2 mins read
d2e966ce-8134-410f-a96c-b3b026d51108
ஒலி968ன் முன்னாள் படைப்பாளர் குணாளன் மோகன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒலி968ன் முன்னாள் வானொலிப் படைப்பாளரும் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமுமான ‘நெருப்பு குணா’ என்று அழைக்கப்படும் குணாளன் மோகன் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவற்றில் நான்கு குற்றச்சாட்டுகள் பாலியல் தொடர்பானவை.

பெண்கள் இருவரின் பிறப்புறுப்புகளைப் படமெடுத்ததாகவும் 16 வயதுக்குக்கீழ் உள்ள ஒருவருடன் பாலியல் ரீதியான உரையாடல்களை வைத்துக்கொண்டதாகவும் 43 வயது குணாளன் மீது வெள்ளிக்கிழமை (மார்ச் 21) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குணாளனின் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மூவரின் அடையாளங்கள், குற்றங்கள் நடந்ததாகக் கருதப்படும் இடங்கள் பற்றிய தகவல்களை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.

மீடியாகார்ப் நிறுவனத்தின் தமிழ் வானொலியான ஒலி968யில் குணாளன் படைப்பாளராகப் பணியாற்றிவந்தார். குணாளன் கைது செய்யப்பட்டது தெரிந்தவுடனேயே அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ததாக மீடியாகார்ப் தெரிவித்தது.

அவரை நிரந்தரப் பணிநீக்கம் செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீடியாகார்ப் சொன்னது. அந்நிறுவனம் மேல்விவரங்களை வழங்கவில்லை.

வெள்ளிக்கிழமையன்று குணாளனின் சார்பாக நீதிமன்றத்தில் யாரும் முன்னிலையாகவில்லை.

வழக்கறிஞரை வைத்துத் தான் வாதிடப்போவதாக குணாளன் நீதிமன்றத்திடம் தெரியப்படுத்தினார்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், 16 வயதுக்குக்கீழ் உள்ள ஒருவருடன் குணாளன் பாலியல் ரீதியான இணையவழி உரையாடலை வைத்துக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தனக்கு எதிராக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது தெரிந்தவுடன் செப்டம்பர் 16ஆம் தேதி அவர் பாதிக்கப்பட்டவருடன் இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் இடம்பெற்ற உரையாடல்களை வேண்டுமென்றே அழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஈடுபட்டதாக நம்பப்படும் அச்செயல், நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும்.

அதோடு, குணாளன் ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் தனது கைப்பேசியைக் கொண்டு இரு பெண்களின் பாலின உறுப்புகளைப் படமெடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால், அவர்மீதான மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசுத் தரப்பால் வழக்கு தொடரப்படும் என்றும் எஞ்சிய நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் மார்ச் 21ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 

குணாளனின் வழக்கு ஏப்ரல் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்