நள்ளிரவுக்குப் பிறகு கைப்பேசியுடன் குளியலறைக்குள் நுழையும் மகன் அங்கு நீண்ட நேரம் செலவிடுவதை கவனித்த தாய், மகனிடம் அதுகுறித்து விசாரித்தபோது, சமூக ஊடகங்களில் மகன் ஆபாசப் படங்களைப் பார்ப்பது தெரியவந்தது.
தனிநபர் விவர பாதுகாப்பு காரணமாக திருவாட்டி இங் என்று மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அந்த 52 வயதான கணக்கர், தனது மகனின் செயலை 2024 நவம்பரில் கண்டறியும் வரை அவனது நடத்தை பல வாரங்களாக தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வந்ததாகக் கூறினார்.
ஒரு பள்ளி திட்டப் பணிக்காக (புரெஜெக்ட்) ஆய்வு செய்யும்போது இன்ஸ்டாகிராமில் அத்தகைய உள்ளடக்கத்தை அந்த 15 வயது சிறுவன் முதலில் பார்த்துள்ளான். அது தாய்ப்பால் கொடுத்தல், சுகாதாரம் தொடர்பான கல்வி ‘ஹேஷ்டேக்கு’களின் கீழ் இணைக்கப்பட்டிருந்ததைச் சிறுவன் சுட்டினான்.
கடந்த 2024 டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வில் யூடியூப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள், உள்ளடக்க விதிகளை மீறும் வழிகளைக் கண்டுபிடித்துள்ளது தெரியவந்தது.
சிறுவர்களைச் சிறந்த முறையில் பாதுகாக்க தெளிவான உள்ளடக்க வழிகாட்டுதல்கள், வலுவான மனித மேற்பார்வை, பெற்றோரின் ஈடுபாடு தேவை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்டி) அணுகிய வல்லுநர்கள் கூறினர்.
கல்வி, பயிற்சி தொடர்பான ஹேஷ்டேக்குகள்
2024 டிசம்பரில் இரு வார காலத்தில் யூடியூபில் 20க்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகளையும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் 30க்கும் மேற்பட்ட அத்தகைய காணொளிகளையும் எஸ்டி கண்டறிந்தது.
அவற்றில் குழந்தை பொம்மைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல பெண்கள் தங்களின் உடலை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகளும் அடங்கும். அத்தகைய காணொளிகள் கல்வி அல்லது பயிற்றுவிப்பு தொடர்பான ஹேஷ்டேக்குகள், தலைப்புகளில் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் சிங்கப்பூர் பயனர்கள் அணுகுவதைக் குறைக்க தீவிரமாக முயற்சி எடுப்பதாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில், ஆணையம் இணையப் பாதுகாப்பிற்கான ஒரு நடைமுறை வழிகாட்டியை வெளியிட்டது, அதில் சமூக வழிகாட்டுதல்கள், பயனுள்ள உள்ளடக்க கட்டுப்பாடு, பயனர்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான புகார் அளிக்கும் வழிமுறைகளை சமூக ஊடகத் தளங்கள் செயல்படுத்த வேண்டும் என்று அது கூறியது.
பயனர்கள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் குறித்து தளங்களுக்குப் புகாரளிக்க முடியும். அவை விரைந்து செயல்பட்டு தடை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை நீக்கி, அதைத் தடைசெய்ய வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
“பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் வெளிப்படையான உள்ளடக்கத்தை தளம் அனுமதிக்காது,” என்று யூடியூப் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“எச்சரிக்கை செய்யப்பட்ட உள்ளடக்கத்தை கவனமாக ஆய்வு செய்து, காணொளிகளை அகற்றுவது, கணக்குகளைத் தடைசெய்வது உட்பட நடவடிக்கை எடுத்தோம்,” என்று அவர் தெரிவித்தார்.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், எச்சரிக்கவும், முன்னர் நீக்கப்பட்டதைப் போன்ற காணொளிகளை தானாகவே அகற்றவும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துகிறது. தானாகவே அகற்றப்படாத உள்ளடக்கம் மனித ஆய்வுக்காக எச்சரிக்கை முத்திரையிடப்படுகிறது.
யூடியூப் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, அது 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை உலகளவில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான காணொளிகளை நீக்கியது. அதில் நிர்வாணம், பாலியல் உள்ளடக்க விதிகளை மீறிய 480,000க்கும் மேற்பட்ட காணொளிகளுக்கு எச்சரிக்கை முத்திரையிடப்பட்டன.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உரிமையாளரான சமூக ஊடக நிறுவனமான மெட்டா, அதே காலகட்டத்தில் பெரியவர்களுக்கான நிர்வாணம், பாலியல் கொள்கையையும் மீறிய 30.5 மில்லியன் உள்ளடக்கங்களுக்கு எதிராக செயல்பட்டதாக அதன் அண்மைய சமூக தர செயலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் 97.8 விழுக்காடு உள்ளடக்கம் நிறுவனத்தால் கண்டறியப்பட்டது.
ஏஐ, மனித உள்ளடக்க நிர்வாகம்
செயற்கை நுண்ணறிவு நிபுணரான பேராசிரியர் போ அன், ‘கல்வி’ எனும் பொருளடக்கத்தின் பரந்த வகைப்பாடு ஒரு முக்கிய ஓட்டையாகும் என்றார்.
தெளிவான உள்ளடக்க நிர்வாக வழிகாட்டுதல், உள்ளடக்க நிர்வாகத்தில் வல்லுநர்களைப் பணியமர்த்துதல், மனிதர்கள் சரிபார்க்கும் தரவுகளுடன் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை வடிவமைப்பது துல்லியத்தை மேம்படுத்த உதவும் என்று பேராசிரியர் அன் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளடக்க நிர்வாகக் கருவிகள் திறம்பட்ட மனித கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் சைமன் செஸ்டர்மன், இணைப் பேராசிரியர் தாமாஸ் மக்கானி இருவரும் கூறினர்.
பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்?
பெற்றோர்கள் நெட் நானி, பார்க்க, குஸ்டோடியோ (Net Nanny, Bark, Qustodio) போன்ற செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கத்தை வடிகட்டும் மென்பொருளை பிள்ளைகளைக் கண்காணிக்கவும், பொருத்தமற்ற உள்ளடக்கத்தைத் தடுக்கவும், எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தலாம் என்று பேராசிரியர் அன் கூறினார்.
எனினும், இணையத்தை எதிர்கொள்வது பற்றி பிள்ளைகளை உரையாட வைக்கும் பெற்றோரின் ஈடுபாடு, நம்பிக்கை அடிப்படையிலான உறவுடன் இணைந்து, இந்தம் கருவிகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றார் அவர்.
“பெற்றோர்கள் இந்தப் பிரச்சினையை அனுதாபத்துடன் அணுக வேண்டும், எல்லைகள், உறவுகள், பொறுப்பான இணையச் செயல்பாடு பற்றிய வெளிப்படையான உரையாடலை வளர்க்க வேண்டும்,” என்றார் கிளாமிங் ஹார்ட்ஸ் ஆலோசனை மருத்துவ இயக்குனர் கரோலின் ஹோ கூறினார்.
இளம் பருவத்தில் ஆபாசப் படங்களுக்கு வெளிப்படுத்தப்படுவது அணுக்கத்தையும் பாலியல் உணர்வுகளையும் சிதைக்கக்கூடும் என்று திருவாட்டி ஹோ கூறினார்.
ஆபாசத்துக்கு அடிமையான அவரது நோயாளிகளில் 70 விழுக்காட்டினர் பதின்ம வயதில் ஆபாசப் படங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, குறிப்பாக இளைய பயனர்களுக்கு என்று சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வி புத்தாக்கத்திற்கான துணைத் தலைவர் பேராசிரியர் செஸ்டர்மேன்,
“தெளிவான எல்லைகளை நிர்ணயித்து, அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், கடவுச்சொற்கள் போன்ற கடுமையான விதிகளை செயல்படுத்தத் தயங்க வேண்டாம்,” என்றார் அவர்.