சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ‘பிஓஎஸ்பி’ வங்கி அனுப்பியது போன்ற போலி மின்னஞ்சல்களால் பாதிக்கப்பட்டோர் ஏறக்குறைய 172,000 வெள்ளியை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிச் சம்பவங்கள் குறித்து ஏறத்தாழ 13 புகார்கள் பெறப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
போலி மின்னஞ்சலில் ‘பிஓஎஸ்பி’ வங்கியில் கைப்பேசி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான மின்னிலக்கக் கருவி காலாவதியாகிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மின்னஞ்சலில் தரப்பட்ட இணைய முகவரி மூலம், அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாம் அல்லது மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் அந்த இணைய முகவரி, தகவல் மோசடிக்கான இணையத்தளத்திற்கு அவர்களை இட்டுச்சென்று, வங்கி விவரங்கள், வங்கி அட்டை விவரங்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மறைச்சொற்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும்படி கேட்டது.
தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டையப் பயன்படுத்தி வெளிநாட்டு நாணய மதிப்பில், அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே பாதிக்கப்பட்டோர் தாங்கள் மோசடிக்கு ஆளானதைப் புரிந்துகொண்டனர்.
வங்கிகள் அனுப்பியது போன்ற போர்வையில் வரும் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது தகவல்களை நிராகரிக்கும்படி காவல்துறை செவ்வாய்க்கிழமை (மே 6) பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
இணையவழி வங்கிச் சேவைக்கான பரிவர்த்தனை வரம்பை அமைத்தல் அல்லது ‘மணிலாக்’ எனப்படும் மின்னிலக்க முறையில் பணத்தை எடுக்கமுடியாத வகையிலான வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தைச் சேமித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அது வலியுறுத்தியது.