பொங்கோல் வட்டாரத்தில் மனநலனை ஊக்குவிக்க மாறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொங்கோல் 21 சமூக மன்றத்தில் பீட்ஸா உணவு வகையின் வடிவத்திலுள்ள சாவிச் சங்கிலிகள் (keychains) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) இளையர்களுக்கு வழங்கப்பட்டன. பகடிவதைக்கு (bullying) ஆளாகும்போது உதவி நாட இளையர்களை ஊக்குவிப்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
‘நம்பிக்கை பீட்ஸா’ (Positivity Pizza) எனும் மனநல இயக்கத்தை நாடாளுன்ற உறுப்பினரான யோ வான் லிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். சிரிப்பதுபோல் இருக்கும் ‘நம்பிக்கை பீட்ஸா’ சாவிச் சங்கிலிகள், பகடிவதைக்கு ஆளாகும்போது அதைப் பற்றித் தெரியப்படுத்தவேண்டும் என்பதை சிறாருக்கும் இளையர்களுக்கும் நினைவூட்டும் என்று திருவாட்டி யோ குறிப்பிட்டார்.
கடந்த 18 மாதங்களாகத் தொண்டூழியர்கள் ஏறத்தாழ 20,000 சாவிச் சங்கிலிகளைக் கைப்படச் செய்துள்ளனர். அவற்றில் 3,000க்கும் அதிகமானவை பொங்கோலில் சிறாருக்கும் இளையர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
வரும் வாரங்களில் மேலும் பல ‘நமபிக்கை பீட்ஸா’ சாவிச் சங்கிலிகள் வழங்கப்படும்.
“சமூகத்தில் இளையரின் மனநலன் குறித்த கவலை அதிகரித்துவந்தது. குறிப்பாக இணையப் பகடிவதை, இணையம் வழி வரக்கூடிய அபாயங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும்,” என்றார் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி யோ.
“நம்பிக்கை தரும் வார்த்தைகள் மூலமாகவும் ஒவ்வோர் இளையருக்கும் ஆதரவளிக்க சமூகம் தயாராய் இருக்கிறது என்று வலியுறுத்தியும் இந்தக் கவலையைக் கையாள நமது சமூகம் ஒன்றுகூடியது,” என்று அவர் விவரித்தார்.
பள்ளியில் பகடிவதைக்கு ஆளான 13 வயது பொங்கோல்வாசி ஒருவர், தனக்குத் தானே தீங்கு விளைவித்துக்கொள்வது பற்றி சிந்தித்ததாக ஒருமுறை தன்னிடம் கூறினார் என்று திருவாட்டி யோ தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தாம் மனநல அறிவுரை (counselling) வழங்கிக்கொண்டிருந்தபோது அப்பெண், தமது பையில் பொருத்தப்பட்டிருந்த முயல் விடிவ சாவிச் சங்கிலியைத் தரமுடியுமா என்று கேட்டதாக திருவாட்டி யோ விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த சாவிச் சங்கிலியைப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தாம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஒருவர் தன் மீது அக்கறை கொண்டுள்ளதை அந்த ‘முயல்’ சாவிச் சங்கிலி தனக்கு நினைவூட்டும் என்று அப்பெண் கூறியிருக்கிறார்.
அச்சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் ‘நம்பிக்கை பீட்ஸா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக திருவாட்டி யோ தெரிவித்தார்.

