நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பாட்டாளிக் கட்சி யாரையேனும் முன்மொழியும்வரை அப்பதவி காலியாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தனது கட்சியைச் சேர்ந்த இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்மொழியப்போவதில்லை என்று புதன்கிழமை (ஜனவரி 21) பாட்டாளிக் கட்சி தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அம்முடிவை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று கருதுவதாகத் தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டிருந்தது.
“தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கென சொந்த நடைமுறைகளை உருவாக்கி இருப்பதால், வேறொரு எம்.பி.யை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது,” என்று அக்கட்சி தெரிவித்தது.
பாட்டாளிக் கட்சி குறிப்பிட்டதுபோல, முதன்மையான எதிர்க்கட்சியின் தலைவரே உண்மையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இயல்பான தேர்வாக இருப்பார் என்று பிரதமர் அலுவலகமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க பிரித்தம் சிங் தகுதியற்றவர் என்று ஜனவரி 14ஆம் தேதி முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது
அதனடிப்படையில், பிரித்தம் சிங் அந்தப் பதவியில் தொடர்வது பொருத்தமாக இருக்காது என்று தாம் முடிவுசெய்துள்ளதாக பிரதமர் வோங் தமது அறிக்கையில் கூறியிருந்தார்.

