சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு காணொளியில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களை அச்சு பிசகாமல் கூறிய பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இணையவாசிகள் சிலர் அந்தப் பெண்ணைச் சிங்கப்பூரின் சிறந்த தூதர் என்று வர்ணித்தனர்.
லண்டனின் கார்னபி ஸ்தீரிட்டில் ஆடவர் ஒருவர் சிங்கப்பூர்ப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அந்தப் பெண் துல்லியமாகப் பதிலளித்தார்.
‘சிங்கப்பூரில் எத்தனை அதிகாரித்துவ மொழிகள் உள்ளன?’, ‘அவை யாவை?’, ‘உலகில் ஆக உயரமான உள்ளரங்கு நீர்வீழ்ச்சி சிங்கப்பூரில்தான் இருக்கிறது என்பது உண்மையா? பொய்யா?’ போன்ற பல கேள்விகள் பெண்ணிடம் கேட்கப்பட்டன.
அதற்கெல்லாம் சிறிதும் தயக்கமின்றி மிகச் சரியான பதில்களை அந்தப் பெண் கூறினார்.
சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளைப் பட்டியலிட்ட பெண், வருடாந்தர தேசியத் தின அணிவகுப்பே சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கிறது என்றும் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உலகின் ஆகப் பெரிய உள்ளரங்கு நீர்வீழ்ச்சி இருக்கிறது என்றும் பெண் கூறினார்.
சிங்கப்பூருக்கே உரிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், டுரியான் வடிவில் அமைக்கப்பட்ட எஸ்பிளனேட் ஆகியவற்றையும் பெண் குறிப்பிட்டார். கடந்த மாதம் 28ஆம் தேதி பதிவேற்றப்பட்ட காணொளியை இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி ஏறக்குறைய 525,000 பேர் பார்வையிட்டுள்ளனர். 30,600க்கும் அதிகமானோர் பிடித்திருப்பதைக் குறிப்பிட்டனர்.
இணையவாசிகள் சிலர் சிங்கப்பூர்ப் பற்றி அந்தப் பெண் எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறார் என்பதைப் பாராட்டினர். வேறு சிலர் அந்தப் பெண் பேசிய விதத்தை மெச்சினர்.