புதிய பிடிஓ வீடுகளில் முன்கூட்டியே அமைக்கப்படும் மின்னூட்ட இடங்கள்

புதிய பிடிஓ வீடுகளில் முன்கூட்டியே அமைக்கப்படும் மின்னூட்ட இடங்கள்

2 mins read
b6caa10c-e71e-4770-9ee0-5f62c889a52c
குடியிருப்புப் பேட்டைகளில் 40,000 மின்னூட்ட இடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் மின்னூட்டத்துக்கான 60,000 இடங்களை அமைக்கும் இலக்கை நோக்கி முன்னேறிவருவதாக போக்குவரத்து மூத்தத் துணையமைச்சர் சுன் ‌ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் மின் வாகனங்களை முன்னிட்டு மார்ச் இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் மின்னூட்டம் செய்ய 30,500 இடங்கள் செயல்படுவதை அவர் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேவைக்கேற்ப கட்டப்படும் புதிய வீடுகளில் மக்கள் குடியேறுவதற்கு முன்னரே மின்னூட்டத்துக்கான இடங்கள் ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டன.

இதற்குமுன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து மின்சாரக் கட்டமைப்பு நகரமன்றத்துக்குக் கைமாற்றப்பட்ட பிறகே மின்னூட்டத்துக்கான இடங்கள் புதிய குடியிருப்புகளில் அமைக்கப்பட்டன.

அத்தகைய சூழலில் புதிய வீடுகளில் குடியேறிய பிறகு மின்னூட்ட மையங்களைப் பயன்படுத்த மின்வாகனம் வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

சிங்கப்பூர் அமைப்பதற்கு இலக்குக் கொண்டுள்ள 60,000 மின்னூட்ட இடங்களில் 40,000 பொது கார் நிறுத்துமிடங்களில் அமைக்கப்படும். 20,000 தனியார் வளாகங்களில் அமைந்திருக்கும் என்று திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொரு கழகக் குடியிருப்புப் பேட்டையிலும் குறைந்தது ஒரு வேகமாக மின்னூட்டம் செய்யும் நடுவம் அமைக்கப்பட்டிருக்கும் என்றார் அவர்.

அத்தகைய மின்னூட்ட நடுவங்களுக்குத் தேவையான மின்சாரத்தை விநியோகிக்க எரிசக்திச் சந்தை ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜேடிசி நிறுவனம் ஆகியவற்றுடன் நிலப் போக்குவரத்து ஆணையம் இணைந்து செயல்படும்.

அதிக தேவையுள்ள கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் மின்னூட்ட மையங்களை அமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நிலப் போக்குவரத்து ஆணையம் இணைந்து செயல்படும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.

தெங்கா குடியிருப்புப் பேட்டையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அங்குள்ள எட்டு பலமாடிக் கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்ட மையங்களை நிறுவும் பணிகள் தொடர்வதாகச் சொன்னார்.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவான புதிய கார்களில் கிட்டத்தட்ட 57.6 விழுக்காட்டு கார்கள் மின்கார்கள்.

குறிப்புச் சொற்கள்