தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓங் பெங் செங்கின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல்

2 mins read
c7d2c14c-0b88-4d03-95ab-9270bc61058e
கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் காணப்பட்ட ஓங் பெங் செங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்துச் சந்தை செல்வந்தரான ஓங் பெங் செங்கின் வழக்கின் முதலாவது வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) நடந்தது.

நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றிருந்த 78 வயது ஓங், ஒரு வாரத்துக்கு முன்பு நாடு திரும்பினார்.

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போகிறாரா இல்லையா என்பதற்கான அறிகுறி எதையும் ஓங் வெளிக்காட்டவில்லை. இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணையைக் கோருவார் என்பதை உறுதியாகக் கூற முடியாது.

ஓராண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றிவரும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் விவகாரத்தின் தொடர்பில் ஓங், இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

அவர்மீதான குற்றச்சாட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஈஸ்வரனைத் தனது செலவில் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு 20,850 வெள்ளி மதிப்பிலான பயணம் மேற்கொள்ளத் தூண்டியதன் தொடர்பிலானது. அதே பயணத்தின் ஓர் அங்கமாக, இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, 2023ஆம் ஆண்டு மே மாதம் ஈஸ்வரன், தோஹாவிலிருந்து சிங்கப்பூர் வர விமானத்தின் வர்த்தகப் பிரிவு இருக்கைக்காக 5,700 வெள்ளியை சிங்கப்பூர் ஜிபிக்கு (Singapore GP) செலுத்த ஓங் வேண்டுமென்றே துணைபோனதாவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு மேலான காலத்துக்கு வெளிநாடு சென்றுவர கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று நீதிமன்றம் ஓங்கிற்கு அனுமதி அளித்தது. அவரைப் பிணையில் விடுவிக்கப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 800,000 வெள்ளிப் பிணைத் தொகையும் அவற்றில் அடங்கும்.

சிகிச்சைக்காக இங்கிலாந்துத் தலைநகர் லண்டன், அமெரிக்காவின் பாஸ்டன் ஆகியவற்றுக்கும் வர்த்தகக் காரணங்களுக்காக ஜிபிரால்ட, ஸ்பெயின் ஆகியவற்றுக்கும் ஓங் பயணம் மேற்கொள்ள அவரின் வழக்கறிஞர் அனுமதி கேட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்