லிட்டில் இந்தியா: குடியிருப்புகளாகும் போருக்கு முந்திய தரைவீடுகள்

2 mins read
7b97fd59-70c6-4b19-ba27-7f701fa333ea
சிட்டி ரோடு எண் 44லிருந்து 60 வரையிலான வீடுகளின் முகப்புப் பகுதி. இந்தப் பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் பொதுமக்களின் குடியிருப்புகளாக மாற்றப்படும். - படம்: சாவ் பாவ்

லிட்டில் இந்தியாவில் இரு வரிசைகளாக அமைந்துள்ள காலனித்துவகால தரைவீடுகள் பொதுமக்கள் குடியிருப்புக்கு விடப்படவுள்ளன.

நகர்ப்புற திட்ட வடிவமைப்பாளர்கள் பலதரப்பட்ட வீட்டு மாதிரிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வீடுகள் யாவும் சிட்டி ரோடு எண் 44லிருந்து 60வரையிலும், வீராசாமி ரோடு எண் 42லிருந்து 58வரையிலும் உள்ளன. இந்த வீடுகள் 1927ம்ஆண்டு கட்டப்பட்டன. இரண்டு வரிசைகளாக ஒவ்வொரு வரிசையிலும் ஒன்பது இரண்டு மாடி தரைவீடுகளான இவை அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டவை. அந்த வீட்டு எண்கள் அனைத்தும் இரட்டைப்படை எண்களாக உள்ளன. இரண்டு வரிசையிலும் ஒற்றைப்படை எண் கொண்ட வீடுகளே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் நகர மறுசீரமைப்பு ஆணையம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அந்த வீடுகளின் கட்டுமான உறுதித்தன்மை குறித்து ஆராய ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்தது. அவை வீடுகளாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக எப்படிப்பட்ட கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயும்படி ஆணையம் தனது ஒப்பந்தப்புள்ளியில் கோரியுள்ளது.

இந்த வீடுகள் யாவும் 1989ஆம் ஆண்டில் லிட்டில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டாரம் என்று வகைப்படுத்தப்பட்டது. அவை 2019ஆம் ஆண்டுப் பெருந்திட்டத்தில் இவ்வாண்டு ஜூலை மாதம் திருத்தியமைக்கப்பட்டபின் குடியிருப்புப் பகுதியாக மாற்றம் கண்டது. முன்னதாக, அவை வர்த்தகப் பயன்பாட்டுக்கு என வகைப்படுத்தப்பட்டிருந்து.

இது குறித்து விளக்கிய ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர், வீராசாமி ரோடு எண் 42லிருந்து 58வரையிலான கட்டடங்கள் அரசாங்கத்திடம் 2006ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டன என்றும் அதுபோல் சிட்டி ரோட்டிலுள்ள எண் 44லிருந்து 60வரையிலான கட்டடங்கள் 2012ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டன என்று கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது.

லிட்டில் இந்தியாவில் உள்ள முன்னாள் நகராட்சி குடியிருப்புகளில் இந்த இரு வரிசை வீடுகள் மட்டுமே குடியிருப்புகளாக பயன்படுத்தப்படவில்லை என்றபோதிலும் இந்த இரண்டு வரிசைகளில் உள்ள வீடுகளே குடியிருப்புக்கு என தற்பொழுது வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மற்றபடி, லிட்டில் இந்தியா போன்ற பழமைப் பாதுகாப்பு வட்டாரத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கு என வகைப்படுத்தப்பட்ட வீடுகள் அதிகாரிகளின் ஒப்புதலுடன் குடியிருப்புக்கும் பயன்படுத்தக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்