தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகைமூட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்

2 mins read
2d43b411-5a06-462f-98d6-55b3daf2263b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூன் மாதத்திலிருந்து வெப்பமான, வறண்ட வானிலை நிலைமை சிங்கப்பூரைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆகவே, அதை எதிர்கொள்ள N95 முகக் கவசங்களும் காற்று சுத்திகரிப்பான்களும் போதிய அளவில் இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புகைமூட்டம் கடுமையானால், அதற்கு ஏற்றவாறு தகுந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை புகைமூட்டத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழு எடுக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் நேற்று தெரிவித்தது.

பொதுவாக, சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியுள்ள வட்டார நாடுகளிலும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரைப்பட்ட காலம் வறண்டதாக இருக்கும். ஆனால், எல் நினோ நிலைமைகளும் இந்திய பெருங்கடலின் இருமுனை நிலைமையும் வறண்ட காலத்தை அக்டோபர் வரைக்கும் நீடிக்கச் செய்யலாம் என்றும் ஆய்வு நிலையம் கூறியது.

"வெப்பமான, வறண்ட வானிலை காட்டுத் தீ, புதர் தீ சம்பவங்களை ஏற்படுத்தும். ஆக, ஜூன் மாதம் முதல் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

"சிங்கப்பூருக்கு அருகில் உள்ள நாடுகளில் தீச் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதிலிருந்து கிளம்பும் புகையை, தென்மேற்கு திசை நோக்கி வீசும் காற்றால் எல்லை தாண்டி சிங்கப்பூரைப் பாதிக்கும்," என்றும் வானிலை ஆய்வு நிலையம் விவரித்தது.

புகைமூட்டம் அதிகமானால், அது குறித்த காற்றுத் தூய்மைக்கேட்டு முன்னறிவிப்பை தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் இணையத் தளம் (www.nea.gov.sg), myENV கைப்பேசி செயலி, புகைமூட்ட இணைய வாசல் (www.haze.gov.sg) ஆகியவற்றின் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கும்.

குறிப்புச் சொற்கள்