பாலருக்குத் தாய்மொழிக் கல்வி விருந்தளிப்போருக்கு விருதுகள்

பாலருக்குத் தாய்மொழிக் கல்வி விருந்தளிப்போருக்கு விருதுகள்

3 mins read
64117b38-5fd5-499a-b576-f3dafaaf0a72
பாலர் பள்ளித் தாய்மொழிக் கல்வியாசிரியர் விருதுகளை வென்ற ஆசிரியைகள் (இடமிருந்து) இராமச்சந்திரன் ஆனந்தி, சுதா கந்தசாமி, சியாமளா கணேசன். - படம்: பே கார்த்திகேயன்

தன் தாயார் வகுத்த வழியில் சென்றாலும், தன் தனித்துவமான கற்பித்தல் முறைகளால் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார் ஈசூன் புளோக் 423 மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் ஆசிரியை திருவாட்டி சுதா கந்தசாமி.

திருவாட்டி சுதா கந்தசாமிக்குத் தலைசிறந்த பாலர்பள்ளித் தாய்மொழியாசிரியருக்கான விருதை வழங்கினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
திருவாட்டி சுதா கந்தசாமிக்குத் தலைசிறந்த பாலர்பள்ளித் தாய்மொழியாசிரியருக்கான விருதை வழங்கினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங். - படம்: பே கார்த்திகேயன்

தாய்மொழிக் கருத்தரங்கு 2024ல் தலைசிறந்த பாலர் பள்ளித் தாய் மொழியாசிரியர் விருதைப் பெற்ற ஏழு ஆசிரியர்களில் ஒரே தமிழாசிரியராக அவர் தமிழ்ச் சமூகத்துக்குப் பெருமைசேர்த்துள்ளார்.

தொடக்கக் காலத்தில் இவருடைய தாயார் பாலர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிய பள்ளியில், இவரும் ‘ஓ’ நிலைத் தேர்வுகள் முடித்த கையோடு உதவினார்.

“பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் அதிலேயே தொடரலாமே எனத் தோன்றியது,” என நினைவுகூர்ந்தார் திருவாட்டி சுதா.

அதனால், இவர் பாலர்பருவக் கல்விப் பட்டயப் படிப்பை மேற்கொண்டு, கடந்த 20 ஆண்டுகளாகப் பாலர் பள்ளி ஆசிரியையாக இருந்து வருகிறார்.

தமிழ் மொழி மீதான பற்றினால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளித் தமிழாசிரியராகவும் இவர் மாறினார்.

பாலர் பள்ளி மாணவர்களின் விருப்பு வெறுப்புகளை நன்குணர்ந்து, தமிழ்மீது ஆர்வம் உண்டாகும் வகையில் பாடங்களில் புத்தாக்கத்தை இணைத்து கற்பித்து வருகிறார் திருவாட்டி சுதா.

சான்றாக, ‘வ’, ‘வா’ இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கண்டறிய மாணவர்களுக்குப் பல வாய்ப்புகளை இவர் வழங்கினார். ‘வார்த்தைப் பாலம்’ எனும் விளையாட்டில் ‘வ’, ‘வா’ எனும் இரு எழுத்துகளைக் கொண்ட பட அட்டைகள்மூலம் சொற்களின் பொருள்களை மாணவர்கள் கற்றனர்.

“பிள்ளைகளின் கற்றல் பின்புலத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறையைக் கையாண்டு, கற்றலை வழிநடத்துவதே என் பொறுப்பாகும்,” என கூறினார் திருவாட்டி சுதா.

பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் எனப் பல பங்காளிகளுடன் இணைந்து குழுவாகப் பணியாற்றும்போது சில சமயம் எழும் கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதும் ஓர் ஆசிரியையின் கடமை என்றார் இவர்.

தகுதிசார் விருதுகள்

கருத்தரங்கில் வழங்கப்பட்ட ஏழு தகுதிசார் விருதுகளில் இரண்டைத் தமிழாசிரியர்கள் பெற்றனர்.

கல்வி அமைச்சின் பாலர் பள்ளி (நார்த்ஷார்) ஆசிரியை இராமச்சந்திரன் ஆனந்தியும் பொங்கோல் கரை புளோக்-171சி, மசெக ஆரம்பகால மழலையர் பள்ளி ஆசிரியை சியாமளா கணேசனும் அவ்விருதுகளை வென்றனர்.

பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான தகுதிசார் விருதை தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர்  விக்ரம் நாயரிடமிருந்து பெறுகிறார் திருவாட்டி இராமச்சந்திரன் ஆனந்தி.
பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான தகுதிசார் விருதை தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயரிடமிருந்து பெறுகிறார் திருவாட்டி இராமச்சந்திரன் ஆனந்தி. - படம்: பே கார்த்திகேயன்

கடந்த 15 ஆண்டுகளாகப் பாலர் பள்ளியாசிரியையாகவும் எட்டு ஆண்டுகளாகத் தமிழாசிரியையாகவும் பணியாற்றியுள்ளார் திருவாட்டி ஆனந்தி.

சிறாரிடத்தில் தமிழ்ப் புழக்கம் குறைவாக இருக்கும் வேளையில், தமிழ் கற்பித்தல் முறைகளில் புதிய பரிமாணங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“பாடங்களில் ஒவ்வொரு சொல்லை அறிமுகப்படுத்தும்போதும் அது குறிக்கும் பொருளின் வடிவத்தையும் உணர்த்தவேண்டும். எடுத்துக்காட்டாக, மாம்பழம் என்ற சொல்லுக்கு, மாம்பழத்தைக் காட்டி, தொட்டுப் பார்க்கச் செய்தால்தான் அவர்களுக்கு மேலும் அறிய ஆர்வம் உண்டாகும்,” என்றார் திருவாட்டி ஆனந்தி.

பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான தகுதிசார் விருதை தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயரிடமிருந்து பெறுகிறார் திருவாட்டி சியாமளா தேவி.
பாலர் பள்ளித் தாய்மொழி ஆசிரியருக்கான தகுதிசார் விருதை தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயரிடமிருந்து பெறுகிறார் திருவாட்டி சியாமளா தேவி. - படம்: பே கார்த்திகேயன்

ஆறு ஆண்டுகளாகப் பாலர் பள்ளியில் தமிழ் கற்பித்துவரும் திருவாட்டி சியாமளா, தன் பள்ளி, பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.

“பாட்டு, கதை, நாடகம், பாரம்பரிய நடனங்கள் போன்றவற்றை எங்கள் பாடங்களில் உட்புகுத்துவோம். என் வகுப்பில் உடுக்கை, பறை, கோலாட்டம், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், போன்றவற்றை சொல்லிக் கொடுப்போம். அவர்களையே செய்துபார்க்கவும் வாய்ப்பளிப்போம்.

“இதன்மூலம் நம் தமிழ் மொழியாக மட்டுமல்லாமல், பண்பாடாகவே அவர்களது மனங்களில் வேரூன்றுகிறது. இது மற்ற இன மாணவர்களையும் பெரிதும் ஈர்க்கிறது,” என்றார் திருவாட்டி சியாமளா.

குறிப்புச் சொற்கள்