வெவ்வேறு சம்பவங்களின்போது மூன்று பிள்ளைகளைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் பாலர் பள்ளி ஆசிரியர், பிள்ளைப் பராமரிப்பு நிலைய ஊழியர் ஆகியோர்மீது துன்புறுத்தல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பிள்ளைகளின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டோரின் பெயர்களையும் பாலர்ப் பள்ளிகளின் பெயர்களையும் வெளியிட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
29 வயது பாலர் பள்ளி ஆசிரியரான பெண் ஒருவர், கடந்த ஆண்டு இரு வேறு இடங்களில் இரண்டு பிள்ளைகளைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி பாலர் பள்ளி ஒன்றில் மூன்று வயது சிறுமியை ஆசிரியராகப் பணிபுரிந்த பெண் கன்னத்தில் அறைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதே ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, வேறொரு பாலர் பள்ளியில் 10 மாதக் குழந்தையின் தலையில் பெண் மூன்று முறை அடித்ததுடன் குழந்தையைப் படுக்கையில் வீசியதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.
மற்றொரு சம்பவத்தில், பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்த பெண் 2024ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நான்கு வயது சிறுவனைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுவனின் தலையில் அந்தப் பெண் அடித்ததாகவும் அவன் கையைப் பிடித்து ஆறு முறை பலவந்தமாக இழுத்து பிளாஸ்டிக்கைக் கொண்டு அவனது தலையில் அடித்ததாகவும் குற்ற அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைப் பராமரிப்பு ஊழியரின் வழக்கு பிப்ரவரி 10ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.
பெண்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்செயல்கள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
பிள்ளைத் துன்புறுத்தல் தொடர்பிலான ஒவ்வொரு குற்றத்திற்கும் எட்டு ஆண்டு சிறைத் தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

