கை, கால், வாய்ப் புண் நோய் சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
கிருமி நீக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள பாலர் பள்ளிகள், உள்விளையாட்டரங்குகள்
cc086a22-20ea-482a-aebc-5e325e195064
படம்: - பிக்சாபே

சிங்கப்பூரில் கை, கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்ததை அடுத்து, சில பாலர் பள்ளிகளும் உள்விளையாட்டரங்குகளும் கிருமி நீக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

மே 19 முதல் 25ஆம் தேதி வரையிலான வாரத்தில் கை, கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் சிங்கப்பூரில் ஆக அதிகமாகப் பதிவாயின.

சராசரியாக அன்றாடம் 50 சம்பவங்கள் பதிவானதாகச் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் அதே காலகட்டத்தில் 29 கை, கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் பதிவாயின.

அண்மையில் இந்நோய்ச் சம்பவங்கள் அதிகரித்ததற்கு, வெப்பமும் மழையுமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கை, கால், வாய்ப் புண் நோய் பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், சளி, மலம் போன்றவற்றின் மூலம் இது பரவும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்கள் மூலமும் இந்நோய் பரவுவதுண்டு.

ஜூரோங் வெஸ்ட் கேட் கடைத்தொகுதியில் உள்ள யூலேண்ட் உள்விளையாட்டரங்கம் அதன் ஊழியர்கள் அடிக்கடி கிருமி நீக்கம் செய்வதாகவும் இரண்டு வாரங்களுக்கு முன் உடல் வெப்பநிலைப் பரிசோதனையைக் கட்டாயமாக்கியதாகவும் கூறியது.

ஈடன்ஹவுஸ் பாலர் பள்ளி, அதன் அனைத்துக் கிளைகளிலும் பயிலும் 9,000 சிறுவர்களுக்கும் வழக்கமான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்வதாகவும் அன்றாடம் கிருமி நீக்கம் செய்வதோடு கை, கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவம் அடையாளம் காணப்பட்டால் செய்ய வேண்டியவை குறித்து ஊழியர்களுக்குக் கற்பித்திருப்பதாகவும் கூறியது.

குறிப்புச் சொற்கள்