தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனத் துணைப் பிரதமரைச் சந்தித்த சிங்கப்பூர் அதிபர், பிரதமர்

2 mins read
b8e26667-9aa7-49da-a1ba-5190b879e8d1
பிரதமர் லாரன்ஸ் வோங் (வலது), சீனாவின் துணைப் பிரதமர் டிங் சூசியாங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள சீனத் துணைப் பிரதமர் டிங் சூசியாங், நவம்பர் 11ஆம் தேதி அன்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

இருதரப்பு ஒத்துழைப்புக்கான உச்சநிலைக் கருத்தரங்காக விளங்கும், இருதரப்பு ஒத்துழைப்புக்கான 20வது கூட்டு மன்றக் கூட்டத்துக்கு இணைத் தலைமை தாங்குவதற்காகவும், துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் அது தொடர்புடைய சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காகவும் திரு டிங் சிங்கப்பூர் வந்துள்ளார்.

நவம்பர் 10ஆம் தேதியன்று, வர்த்தக தொழில் அமைச்சருமான திரு கான், சீனத் துணைப் பிரதமருக்கு இரவு விருந்தளித்தார். அதில் அவருக்கு உப்பு முட்டையுடன் சமைக்கப்பட்ட பாராமண்டி மீன் பரிமாறப்பட்டது.

சிங்கப்பூரில் வளர்க்கப்படும் ஆறு மீன் மற்றும் மீன் சார்ந்த பொருள்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய சிங்கப்பூர் அனுமதிக்கும் குறிப்பில் நவம்பர் 10ஆம் தேதியன்று இரு தரப்பும் கையெழுத்திட்ட பிறகு, சிங்கப்பூரில் வளர்க்கப்படும் பாராமண்டி மீன் சீனாவில் விற்கப்படும்.

இதற்கிடையே, நவம்பர் 11ஆம் தேதியன்று, மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், திரு டிங்குக்குப் பகல் விருந்தளித்தார்.

அவர்களின் சந்திப்பின்போது, ​​இருதரப்புத் தலைவர்களும் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால, உறுதியான உறவுகளை மறுஉறுதிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

வர்த்தகம், பொருளாதார இணைப்புகள் முதல் மின்னிலக்கம், நிதி இணைப்பு, நிலைத்தன்மை, புதுமை, உணவு மற்றும் வேளாண், சட்டம் மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளின் பரந்த மற்றும் முன்னோக்கு ஒத்துழைப்பின் நேர்மறையான வேகத்தைத் தலைவர்கள் வரவேற்றனர்.

இரு நாடுகளின் அந்தந்த வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளியல் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்