தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லி சியாங், ஸெலன்ஸ்கியுடன் அதிபர் தர்மன் சந்திப்பு

1 mins read
6dc5007c-58fe-4aea-8379-7e46287d3400
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளியல் மாநாட்டுக்கு முன் கைகுலுக்கிச் சந்திப்பு நிகழ்த்திய உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (வலம்) , சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ராய்ட்டர்ஸ்

டாவோஸ், சுவிட்சர்லாந்து: சிங்கப்பூர், சீனா ஒத்துழைப்பு தொடர்பான வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், சீனப் பிரதமர் லி சியாங் இருவரும் ஜனவரி 16ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினர்.

இருவரும் உலகப் பொருளியல் கருத்தரங்கின் ஆண்டுக் கூட்டத்துக்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளனர்.

பசுமைசார்ந்த பொருளியலுக்கு ஆசியா மாற, சிங்கப்பூரும் சீனாவும் தங்களின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஜனவரி 17ஆம் தேதியன்று திரு தர்மன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

திரு தர்மன் ஜனவரி 16 அன்று உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் சந்தித்தார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து கொள்கைரீதியாக முடிவெடுத்த சிங்கப்பூர், உக்ரேனுக்கு ஆதரவு கொடுத்ததற்காக திரு ஸெலன்ஸ்கி நன்றி தெரிவித்ததை திரு தர்மன் தம் பதிவில் குறிப்பிட்டார்.

அத்துடன் மனிதாபிமான உதவி வழங்கியதற்காகவும் ஸெலன்ஸ்கி சிங்கப்பூருக்கு நன்றி உரைத்ததாக அதிபர் தர்மன் தெரிவித்தார்.

உக்ரேன் கேட்டுக்கொண்டதன்படி, 22 அவசர மருத்துவ வண்டிகளை அனுப்ப சிங்கப்பூர் சம்மதித்துள்ளது. அவை சிங்கப்பூர் துறைமுகத்தை விட்டு கிளம்பிவிட்டதை திரு தர்மன் ஸெலன்ஸ்கியிடம் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.

டாவோஸ் கருத்தரங்கில் பலதரப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க முடிந்தது பயனுள்ளதாக அமைந்ததென திரு தர்மன் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்